'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 15) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி மற்றும் தளபதியின் பேச்சு செம வைரலாகி வருகிறது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை மாஸ்டர் பட டிராக் லிஸ்ட் வெளியானது. அதனை பார்த்த அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் அதில் பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் பாடல் பாடியிருந்தது தான். குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கும் யுவன் ரசிகர்களுக்கும் சரி, 'புதிய கீதை' படத்துக்கு பிறகு எப்பொழுது இருவரும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
தற்போது இந்த டிராக் லிஸ்ட் பார்த்ததும் ஓரளவுக்கு அவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள். கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான 'வேலை' என்ற படத்தில் யுவன் இசையில் 'காலத்துக்கேத்த கானா' என்ற பாடலை தளபதி பாடியிருப்பார். அதன் பிறகு யுவன் இசையில் விஜய் நடித்திருந்த 'புதிய கீதை' படத்தில் விஜய் எந்த பாடலும் பாடவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த காம்போ இணைந்துள்ளதால் ரசிகர்கள் செம ஹேப்பி. மாஸ்டர் படத்தில் யுவன் பாடியுள்ள 'அந்த கண்ண பார்த்தாக்கா' பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதனையடுத்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்னேஷ் சிவன் விஜய் மீது தனக்கு இருக்கும் காதலை இந்த பாடல் மூலம் குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார்.
ராக் ஸ்டார் அனிருத்தின் எல்லோரையும் சட்டென ஈர்க்கும் பெப்பியான இசையுடன் யுவனின் குரலும் சேர பின்னர் நிகழ்வதை கேட்கவா வேண்டும். மாஸ்டர் படத்தில் எல்லா பாடல்களும் சற்று ஃபாஸ்ட் பீட்டில் அதிரடியாக எல்லோரையும் இறங்கி ஆட்டம் போட வைக்க, இந்த பாடல் காதல் மெலோடியாக சற்று இளைப்பாறல் தருகிறது.
மேலும் யுவன் குரலுக்கென்ற தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக 'புதுப்பேட்டை'யில் ஒருநாளில் உள்ளிட்ட பாடல்களில் அவர் உச்சஸ்தாயில் பாடும் போது கேட்பவர்கள் ஒரு வித பித்து நிலைக்கு செல்வர். மேலும் ரொமான்டிக் பாடல்களையும் ஆங்கிலப் பாடல் போன்ற உச்சரிப்பில் அவர் பாடும்போது ஒரு கிரக்கம் ஏற்படும். அந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க சொல்லும். அது இந்த பாடலிலும் எதிரொலித்துள்ளது.
இந்த பாடல் உண்மையில் தளபதிக்காக விக்னேஷ் சிவனின் காதல் மட்டும் அல்ல ரசிகர்களின் காதலையும் பிரதிபலிக்கிறது.உதாரணமாக பாடல் வரிகள் ''மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு, கிளாஸான மாஸு... அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோணாதா, அவன் சிரிப்ப பார்த்தாக்கா மனம் மானா மாறாதா?.. அழகன் தான் அவன் தான் அளவா சிரிப்பானே அழகன் தானே என்று அமைந்துள்ளது. இது தான் தளபதிய பார்க்குற எல்லோருக்கும் தோணும் இல்லயா ?