கடைசியாக நடிகர் ஆர் ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்த எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதிகளில் கடந்த வாரம் தொடங்கியுள்ளதாகவும் தொடர்ச்சியாக 45 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரீமேக் படத்தில் R J பாலாஜிக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டு தான் இந்த ரீமேக் படத்தில் நடிகர், இயக்குனர் ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிப்பதாக உறுதி செய்துள்ளார். இதற்கு ஆர். ஜே பாலாஜியும் பதிலுக்கு நடிகர் யோகி பாபுவை வாழ்த்தி நன்றி கூறியுள்ளார்.