யோகி பாபு நடிக்கும் படத்தின் தலைப்பு மாற்றம்? வீரப்பன் குடும்பத்தாரின் வேண்டுகோள் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை கலாய்த்து தள்ளுவதற்கு தயராகி விட்டார். யோகி பாபு நடிக்கும் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதோடு, அவர்களிடம் கூடுதல் கவனம் பெரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மொட்டை ராஜேந்திரனும் இணைந்திருப்பதால், இவர்களுடைய கூட்டணியின் காமெடி காட்சிகள் ரொம்ப தூக்கலாகவே வந்திருக்கிறதாம்.

‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். எனவே, இப்படத்தின் புதிய தலைப்பு, இதைவிட சுவாரஸ்யமான தலைப்பாக விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

காடுகள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதுவும் குழந்தைகள் என்றால், காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து பொழுதுபோக்கிற்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் குழந்தைகள் ரசிக்கும் அளவுக்கு காட்டு விலங்குகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர். விலங்கு நல அமைப்பின் வழிகாட்டின் பேரில் படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் விலங்குகள் வரும் காட்சிகள் அனைத்தும் குழந்தைகளை குஷிப்படுத்தும் என்பது உறுதி.

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்க, ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன், யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனின் காம்போவால் இப்படம் பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அடர்ந்த காடுகளிலும், காடுகள் சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின்  படப்பிடிப்பு தென்காசி, தளக்கனம், நாகர்கோவில் உள்ளிட்ட இயற்கை எழில் மிகுந்த பகுதியில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன. கலகலப்பான காமெடி படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் பாராட்டு பெறும் விதத்திலும் இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Yogi Babu

தொடர்புடைய இணைப்புகள்

Yogi babu 'Veerappanin Gajana' tittle will be changed

People looking for online information on Yogi Babu will find this news story useful.