ஜி.வி.பிரகாஷ் குமார் அனைவரும் விரும்பும் இசையமைப்பாளராக பிரபலமடைந்தவர். ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனாக இருந்தாலும் ஜி.வி தமது சொந்த திறமையை முன்வைத்தே இசையுலகில் பிரபலமாக அறியப்பட்டார்.
இந்நிலையில் அண்மைக் காலமாக ஜி.வி.பிரகாஷ்க்கு நடிகராக ஏகப்பட்ட ரசிகர்களின் பட்டாளமே குவிந்துள்ளது. டார்லிங் படத்தில் தொடங்கிய ஜி.வி.பிரகாஷின் நடிப்புப் பயணம் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் இயக்குநர் ராஜேஷின் இயக்கத்தில் ஜி.வி.நடித்த வணக்கம்டா மாப்பிள்ளை படம் சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
சன் நெக்ஸ்ட்டில் நேரடியாக ரிலீஸ் ஆன இப்படத்தில் ஜி.வியுடன் இணைந்து அம்ரிதா ஐயர், டேனியல் போப், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு ஒரு காட்சிக்கு மட்டும், அதுவும் யோகி பாபுவாகவே தோன்றுகிறார். ஒரு கல்லூரியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் யோகிபாபு, அந்த விழாவில் பேசிய வசனங்களை அவரது சொந்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் பேசிய யோகிபாபு, “இன்னைக்கு நான் இவ்ளோ பெரிய நடிகனா ஆயிருக்கேன்னா அதுக்கு காரணம் ஒன்னு இருக்கு. யார் நெகடிவா பேசினாலும் நான் அதை காது கொடுத்து வாங்கிக்க மாட்டேன். அன்னைக்கு என் தோற்றத்தை ஷேமிங் (கிண்டல்) பண்ணியவர்கள் எல்லாமே இன்னைக்கு தாடி ஷேவிங் பண்ண கூட காசு இல்லாம ரோட்ல சுத்திட்டு இருக்கான். அதே மாதிரி, ஸ்டூடன்ஸ் ஆகிய நீங்களும் இருங்கள். நல்லா படித்து முன்னேறுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: 'அப்துல் கலாமுடன் விவேக்!'.. 'நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும்' வைரல் புகைப்படம்!