நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும், கதாநாயகனாக நடித்துள்ள சிம்பு, 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று (02.09.2022) நடைபெற்றது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடந்த நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, கௌதம் மேனன், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் யோகி பாபுவும் வெந்து தணிந்தது காடு ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது பேசிய அவர், "வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆவதற்கு இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன். மண்டேலா திரைப்படம் பார்த்து விட்டு, நிச்சயமாக ஒரு நாள் யோகி பாபுவை வைத்து டைரக்ட் பண்ணுவேன் என்று கௌதம் மேனன் சார் குறிப்பிட்டார். மிக்க நன்றி சார், நீங்கள் தான் அந்த படத்தை பார்த்து பதிவிட்ட முதல் இயக்குனர்
உங்களுடைய மின்னலே திரைப்படத்திலிருந்தே நான் உங்கள் ரசிகன். அதே போல, வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் நம்முடைய குடும்ப நிறுவனம் போல் ஆகிவிட்டது. அடுத்தடுத்து அவர்களுடைய திரைப்படத்தில் நடிக்கிறேன்.முன்னதாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தேன்.
சிம்பு சாரைப் பொறுத்தவரை அவருடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படத்தில் நடித்தேன். சிம்பு நடிப்பதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். அவர் நடித்து முடித்து விட்டு எப்படி இருக்கிறது என கேட்பார். சிங்கிள் ஷாட்டில் பண்ணி விட்டு வருவார், வேறு மாதிரி இருந்தது என்று சொல்வேன். இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. என்னை பேசுவதற்கு அழைத்த அனைவருக்கும் நன்றி" என யோகி பாபு கூறி இருந்தார்.