பிக்பாஸுக்கு முன், விபத்துக்கு பின் என்று தன் வாழ்க்கையை இரண்டாக பிரித்து, ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் EXCLUSIVE நேர்காணல் கொடுத்துள்ளார்.
பிக்பாஸுக்கு முன்
பிக்பாஸுக்கு முன்பு வாழ்க்கை மிகவும் மெதுவாகச் சென்றது. அவ்வப்போது நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பு இரண்டு படங்கள் நடித்து இருந்தேன். பிறகு தான் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால், எனக்கு ரசிகர்களை கவர வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. பிக் பாஸ் எல்லா மக்களும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.அதனால், நான் அதை தேர்வு செய்து சென்றேன். முதல் முறை நான் ஃபீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்றிருந்தபோது பல ஆண் ரசிகர்கள் என்னை சூழ்ந்தனர். ஆனால் பிக்பாஸ்-க்கு பின் பல பெண் ரசிகர்கள், தாய்மார்கள் என்னை சூழ்ந்தனர். என்னை அவர்கள் வீட்டு பிள்ளை போல் நினைத்து வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ரொம்ப கஷ்டப்பட்டேன்
எனக்கு கார் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது என்னால் சுயமாக எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. என்னால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. என்னால் நிமிர்ந்து உட்கார கூட முடியவில்லை. என்னை யாராவது சுத்தம் செய்யும் போது என்னை அறியாமல் நான் மன வருத்தத்திற்கு ஆளானேன். நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால், எதற்கு என்று தெரியவில்லை என அடிக்கடி நினைத்து மன உளைச்சல் ஏற்பட்டது.
பலமுறை கவலைப்பட்டேன்
மேலும் இரண்டு மாதங்களுக்கு என்னால் நகரக் கூட முடியாத நிலையில் இருக்கும் போது, நான் பல முறை அழுதேன். நான் அழும் போதும் என் உடலில் வலி ஏற்பட்டது, என்னால் அழ கூட முடியவில்லை. எனக்கு கையில் தலைசாய்த்து தான் தூங்க பிடிக்கும் ஆனால் அது கூட என்னால் செய்ய முடியவில்லை என்ற வருத்தமும், டென்ஷனும் எனக்கு ஏற்பட்டது.
உதவ முன்வந்தார்கள்
இரண்டு மாதங்களுக்குப் பின் நான் காலை எடுத்து தரையில் வைக்கும்போது மிகவும் சந்தோஷப்பட்டேன். நகரக் கூட முடியாத நிலையிலிருந்து தற்போது மீண்டு நடக்கும்போது சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார். மருத்துவமனையில் அனைவரும் நான் மீண்டு வர வேண்டினார்கள். பின் சினிமா வட்டாரங்களில் நடிகர் தனுஷ், ஜி.வி பிரகாஷ், டோவினோ தாமஸ் மற்றும் பல நடிகர்கள் தொடர்புகொண்டு என்ன உதவி வேண்டும் எனவும் கேட்டதாக கூறினார்.
குணமடைந்தேன்
சிலர் என்னை வெறுத்தாலும், ஆயிரம் பேர் என்னை விரும்புகிறார்கள் என்ற சந்தோஷம் இருந்தது. மேலும் நான் முழுவதும் குணமடைய மருத்துவர்கள் சுமார் 7, 8 மாதங்கள் ஆகும் என்றார்கள். ஆனால் நான் 3,4 மாதங்களிலேயே குணமடைந்து தற்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
மோசமான பதிவு
பின் குணமடைந்து சமூகவலைதளங்களில் வரும்போது, அதில் பல கமெண்ட்கள் இருந்தன. அதில் ஒருவர் "நீ இன்னும் சாகலையா" என்று கேட்டார். அதற்கு நானும் "நான் சீக்கிரம் மரணிக்க வேண்டிக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தேன். அவர் வேண்டுதல் உண்மையானால், நான் இறந்திருப்பேன். ஆனால் நான் இறக்கவில்லை, நான் பல கஷ்டங்களுக்கு பிறகு உயிரோடு இருக்கிறேன், இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இதுபோல் நெகடிவ் கமெண்டுகளை விட்டுவிடுங்கள், பாசிட்டிவாக இருப்பதே எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.