தமிழின் மிகப்பிரபலாமான எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆவார்.
இவர் ‘கண்டேன் காதலை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காக்கிச் சட்டை’, ‘காப்பான்', 'அந்தகன்' போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஆவார். இயக்குனர் கே.வி ஆனந்தின் நெருங்கிய நண்பர். இவர் இயக்குனர் K. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றி உள்ளார். பல நாவல்கள், சிறுகதைகளை எழுதி எழுத்து உலகிலும், திரை உலகிலும் நன்கு அறியப்படுபவர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
சமீபத்தில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்தை 'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்க, சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த டாக்டர் திரைப்படம். இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் இந்த படம் பற்றிய தனது சொந்த விமர்சனத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர், "டார்க் காமெடி படம் என்பதால் முதல் காரியமாக தர்க்கரீதியான கேள்விகள் எழுப்பும் மூளையை தியேட்டருக்கு வெளியிலேயே ஒப்படைத்துவிட வேண்டும். எதையும் அசாதரணமாக அணுகும் நியாயஸ்தராக மிலிட்டரி டாக்டர். தன்னை நிராகரிக்கும் பெண்ணின் வீட்டில் நிகழும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கி வெல்கிறார். சிவகார்த்திகேயன் தவிர மற்ற எல்லாப் பாத்திரங்களும் அங்க சேட்டை மற்றும் ஒன் லைனர்களால் காமெடி செய்கிறார்கள்.
ஆனால் ஹீரோ கிட்டத்தட்ட ரோபோ மாதிரி தலையைக்கூட அசைக்காமல் வசனம் பேசும் மேனரிசம் எடுபடவில்லை. அவர் இயல்பாகவே இருந்திருந்தால்..அவரும் காமெடி வசனங்கள் பேசியிருந்தால் கூடுதல் பலமாகதான் இருந்திருக்கும். ஏற்கெனவே பிரபலமான செல்லம்மா பாடலை படம் முடிந்தபிறகு வைத்திருப்பதால் சிலர் போய்விட.. சிலர் நின்றபடி பார்க்கிறார்கள்.
முன்வரிசைகளில் பல இடங்களில் விழுந்து விழுந்து சிரிக்க..பின் வரிசைகளில் கப்சிப்பென்று மெளன விரதம் இருக்கும் முரண் புதுசு. (நான் இடைப்பட்ட வரிசையில்..) எல்லோரும் சிரிப்புப்படம் என்று சொல்லி சிரிக்கத் தயாராகிப் போனால் என் வரையில் கொஞ்சம் ஏமாற்றம்தான். அல்லது எதற்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்பதில் என்னிடம் ஏதோ ரசனைக் கோளாறு இருக்கிறதோ?" என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.