பிரபல சீரியல் நடிகை வட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் தான் ஜெயலக்ஷ்மி. சின்னத்திரையில் கேளடி கண்மணி, கல்யாண பரிசு, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெயலக்ஷ்மி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக உள்ளிட்ட பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தவிர திரு திரு துரு துரு, மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் ஜெயலக்ஷ்மி தோன்றியிருக்கிறார். இதேபோல் பாஜகவில் பங்களிப்பு செய்யும் வகையில் நடிகை ஜெயலக்ஷ்மி, கடந்த தேர்தலின்போது பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில்தான் அவர் வட்டி பண விவகாரத்தில் போன் பண்ணி மிரட்டுவதாக இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
அதன்படி கீதா என்கிற இளம் பெண், சென்னையில் இருக்கும் பாடி - காவல் நிலையத்தில் ஜெயலக்ஷ்மி மீது அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் புகாரின்படி, மகளிர் சுய உதவிக்குழு நடத்திவரும் கீதா என்பவர் அண்மையில்தான் சீரியல் நடிகை ஜெயலக்ஷ்மியுடன் அறிமுகமானதாகவும், இந்த கொரோனா காலத்தில் பெண்கள் பலரும் சிரமப்பட்டு வருவதை முன்னிறுத்தி கீதா மற்றும் கீதாவின் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு நடிகை ஜெயலக்ஷ்மி உதவி செய்வதாகவும், வங்கியில் இருந்து பணம் பெற்றுத் தருவதாகவும் கூறியதாக கீதா குறிப்பிட்டிருக்கிறார்.
பின்னர், இது தொடர்பாக நடிகை ஜெயலக்ஷ்மி பெற்றுத்தந்த அந்த வங்கிக்கடன் தொகைக்காக, ஜெயலட்சுமி, மாதமாதம் கீதா உள்ளிட்டோரிடம் பணம் பெற்றதாகவும், ஆனால் அந்த பணம் எல்லாம் வட்டிதான் என்றும், இன்னும் அசலை கொடுக்க வேண்டும் என்றும், ஜெயலக்ஷ்மியும் அவருடைய வழக்கறிஞரும் மிரட்டுவதாக கீதா புகார் அளித்திருக்கிறார்.
அதேபோல் வங்கிக் கடனுக்காக பல விண்ணப்ப படிவங்களிலும், சில வெற்றுப் பேப்பர்களிலும் கீதா கையெழுத்துப் போட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக கீதாவின் வீட்டுக்கு இரவு நேரங்களில் வந்து, சில ஆட்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பல நேரங்களில் போன் பண்ணி மிரட்டுவதாகவும் கீதா குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஜெயலக்ஷ்மியிடம் நேரடியாக இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “கீதா போலீசாரிடத்தில் புகார் அளித்து இருப்பது உண்மைதான்.
அதே சமயம் எங்கள் தரப்பில் இருந்து எங்கள் தரப்பு நியாயத்தை நாங்களும் மனுவாக எழுதி அளித்திருக்கிறோம். குறிப்பாக கீதாவின் இந்த புகார்களுக்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம்” என்று நடிகை ஜெயலக்ஷ்மி குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிகிறது.