94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் அதிக கவனம் பெறும் விருது ஆஸ்கர் எனப்படும் அமெரிக்க விருதாகும். ஹாலிவுட் படங்களுக்கும் பிறமொழிப் படங்களுக்கு தனிப்பிரிவிலும் வழங்கப்படும் இந்த விருது இதுவரைஒ 93 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து 94 ஆவது ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்து வருகிறது.
வில் ஸ்மித்தின் முதல் ஆஸ்கர்
இந்த விழாவில் கவனம் ஈர்த்தது வில் ஸ்மித் வாங்கிய ஆஸ்கர் விருதுதான். ஏற்கனவே இரண்டு முறை அவர் பெயர் பரிசீலனையில் இருந்தும் அவருக்கு விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கிங் ரிச்சர்ட் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் நடிகர் வில் ஸ்மித். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விபரீதமான விளையாட்டு
இந்நிலையில் இந்த மேடையில் இப்போது தர்மசங்கடமான சூழல் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை அறிவிக்க வந்த நடிகர் கிறிஸ் ராக் மேடையில் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பின்கெட் ஸ்மித்தைப் பற்றிய ஒரு ஜோக்கை கூறினார். இதை முன் வரிசையில் அமர்ந்திருந்த வில் ஸ்மித் ரசிக்கவில்லை. இதனால் கோபமான வில் ஸ்மித் மேடையில் ஆவேசாமாக ஏறிச் சென்று கிறிஸ் ராக்கை பளார் என அறைந்தார். பின்னர் கோபமாக ‘என் மனைவியின் பெயரை சொல்வதை தவிருங்கள்’ எனக் கத்திவிட்டு தனது இருக்கைக்கு சென்றார்.
தர்மசங்கடமான நிலை….
வில் ஸ்மித்தின் இந்த கோபமான செய்கையால் ஆஸ்கர் மேடை பரபரப்பாகி அங்கு சில நொடிகள் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் மேடையில் இருந்த கிறிஸ் ராக் ‘இது தொலைக்காட்சி வரலாற்றின் முக்கியமான இரவுகளில் ஒன்றாக இருக்கும்’ எனக் கூறினார்.
மன்னிப்பு கேட்ட கிறிஸ் ராக்…
கிறிஸ் ராக் வில் ஸ்மித் மனைவி ஜேடாவின் தலைமுடி பற்றி ஏதோ சொல்ல அதனால் கடுப்பாகியுள்ளார் வில். சில உடல்நலக் குறைபாடுகள் காரணமாக ஜேடாவின் தலைமுடிகள் உதிர ஆரம்பித்துள்ளன. இதனால் அதுபற்றி பேசியதும் வில் கோபமானதாக தெரிகிறது. இந்த நிகழ்வுக்கு பிறகு கிறிஸ் ராக் வில் ஸ்மித் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் பற்றி பேசியுள்ள வில் ஸ்மித் ‘காதல் உங்களை இதுமாதிரியான பைத்தியக்கார தனமான செயல்களை செய்ய தூண்டும்’ என கூறியுள்ளார்.