நேற்று ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் நடந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வில் ஸ்மித்.
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் அதிக கவனம் பெறும் விருது ஆஸ்கர். ஹாலிவுட் படங்களுக்கும் பிறமொழிப் படங்களுக்கு தனிப்பிரிவிலும் வழங்கப்படும் இந்த விருது இதுவரைஒ 93 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து 94 ஆவது ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்து முடிந்தது.
விபரீதமான ஜோக்…
நேற்றைய ஆஸ்கர் மேடையில் தர்மசங்கடமான நிகழ்ச்சி ஒன்று நடந்து உலகளவில் கவனத்தைப் பெற்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை அறிவிக்க வந்த நடிகர் கிறிஸ் ராக் மேடையில் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பின்கெட் ஸ்மித்தின் தலைமுடிப் பற்றிய ஒரு ஜோக்கை கூறினார் (ஒரு உடல்நலப் பிரச்சனைக் காரணமாக பிங்கெட்டின் தலைமுடி சமீபகாலமாக உதிர்ந்துவருவதால் அவர் மொட்டை அடித்திருந்தார்). இதை முன் வரிசையில் அமர்ந்திருந்த வில் ஸ்மித் தம்பதிகள் ரசிக்கவில்லை.
இதனால் கோபமான வில் ஸ்மித் மேடையில் ஆவேசாமாக ஏறிச் சென்று கிறிஸ் ராக்கை பளார் என அறைந்தார். பின்னர் கோபமாக ‘என் மனைவியின் பெயரை சொல்வதை நிறுத்துங்கள்’ எனக் கத்திவிட்டு தனது இருக்கைக்கு சென்றார். வில் ஸ்மித்தின் இந்த கோபமான செய்கையால் ஆஸ்கர் மேடை பரபரப்பாகி அங்கு சில நொடிகள் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் மேடையில் இருந்த கிறிஸ் ராக் ‘இது தொலைக்காட்சி வரலாற்றின் முக்கியமான இரவுகளில் ஒன்றாக இருக்கும்’ எனக் கூறி சமாளித்தார்.
காதலும் பைத்தியக்காரத்தனமும்….
இந்த நிகழ்வுக்கு பிறகு கிறிஸ் ராக் வில் ஸ்மித் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல ஆஸ்கர் விருதை பெற்ற மேடையில் பேசிய வில் ஸ்மித் ‘காதல் உங்களை இதுபோல பைத்தியக் காரத்தனமான செயல்களை செய்யவைக்கும்’ எனக் கூறியிருந்தார். வில் ஸ்மித் செய்தது சரிதான் எனவும் உடல்ரீதியாக தாக்கும் நகைச்சுவைகளுக்கு இப்படிதான் பதில் சொல்ல வேண்டும் எனவும் ஆதரவுக்குரல்கள் எழுந்துள்ளன.
வன்முறைக்கு உலகில் இடமில்லை…
இந்த சம்பவம் உலகளவில் பல விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் தற்போது வில் ஸ்மித் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘ வன்முறை என்பது எந்த வடிவில் இருந்தாலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. நகைச்சுவைகள் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் ஜடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. அதற்கு நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன்.
கிறிஸ் ,நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் எல்லையைத் தாண்டிவிட்டேன். நான் செய்த தவறுக்காக வெட்கப்படுகிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் இதைப் பார்த்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட்(இந்த படத்துக்காகதான் ஆஸ்கர் விருதை வென்றார் வில்) குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நம் அனைவருக்கும் ஒரு அழகான நிகழ்வாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.