அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி படங்களுக்கும் தனிப்பிரிவில், வழங்கப்பட்டு வரும் இந்த விருது, இதுவரை 93 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 94 ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.
விருது வென்ற வில் ஸ்மித்
இந்த நிகழ்ச்சியில், நடிகர் வில் ஸ்மித் முதல் முறையாக ஆஸ்கர் விருது வாங்கியது தான், சிறப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, இரண்டு முறை ஸ்மித்தின் பெயர், பரிசீலனையில் இருந்தும், அவருக்கு விருதினை வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த முறை 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்திற்கு வேண்டி, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளார் நடிகர் வில் ஸ்மித். முதல் முறையாக, ஆஸ்கர் விருது வென்ற வில் ஸ்மித்திற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஆஸ்கர் மேடையில், மற்றொரு ஒரு பரபரப்பான சூழலும் நிலவி இருந்தது.
கன்னத்தில் பளார் அறை
ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த ஸ்டான்ட்-அப் காமெடியனும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி குறித்து கிண்டலுடன் பேசினார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த வில் ஸ்மித், அதனை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை, உடனடியாக, மேடையில் ஏறிச் சென்ற அவர், கிறிஸ் ராக்கை பளார் என அறைந்தார். பின்னர் கோபமாக ‘என் மனைவியின் பெயரை சொல்வதை தவிருங்கள்’ எனக் கத்திவிட்டு தனது இருக்கைக்கு சென்றார்.
மனைவியின் உடல்நலம் குறித்த ஜோக்
வில் ஸ்மித் மனைவி ஜெடாவுக்கு உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, தலைமுடிகள் உதிர ஆரம்பித்துள்ளன. இதனால், மனைவியின் தலை பற்றி பேசியதும் வில் ஸ்மித் கடுப்பாகி கிறிஸ் ராக்கை அறைந்துள்ளார். தொடர்ந்து, தனது காமெடிக்கு, வில் ஸ்மித் குடும்பத்தினரிடம், கிறிஸ் ராக் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது.
காதல் இப்படி தான் பண்ணும்
தொடர்ந்து, ராக்கை அறைந்த அதே மேடையில், ஆஸ்கர் விருதினை வென்ற வில் ஸ்மித், "நான் அகாடமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதே போல, சக போட்டியாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு அழகான தருணம். நான் விருதினை வென்றதற்காக அழவில்லை. இது நான் விருது வென்றது பற்றி கிடையாது. இது மாதிரி ஆட்களின் வாழ்க்கையில் ஒளிர செய்வது தான். கலை தான் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. ரிச்சர்ட் வில்லியம்ஸ் மாதிரி நானும் ஒரு 'Crazy' நபர் தான். காதல் உங்களை வேடிக்கையான விஷயங்களை செய்ய தூண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
வில் ஸ்மித் ஆஸ்கர் மேடையில், கிறிஸ் ராக்கை அறைந்தது பற்றியும், அதன் பின்னர் மேடையிலேயே விருது வாங்கிய பிறகு, மன்னிப்பு கேட்டது பற்றியும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.