பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் கலந்துகொண்ட முக்கியமான போட்டியாளர் நமீதா மாரிமுத்து. பிக்பாஸ் வீட்டுக்குள் கலந்துகொண்ட முதல் திருநங்கை போட்டியாளரான நமீதா, தமது கதையை கதைசொல்லும் டாஸ்கில் கூறியிருந்தார்.
அதன்படி, தன்னை தன் பெற்றோர் புரிதல் இல்லாமல் மனநல மருத்துவமனையில் சேர்த்தது தொடங்கி அங்கிருந்து தப்பி, கோர்ட்டின் தீர்ப்பு மூலம் விடுதலை பெற்றது; தாமதமாக தமது தந்தையும் பின்னர் தாயாரும் ஏற்றுக்கொண்டது வரை அனைத்தையும் கூறியிருந்தார்.
மேலும் இதுவரை 25 படங்களில் நடித்திருப்பதாக தெரிவித்திருந்த நமீதா மாரிமுத்து, தொடர்ந்து தன் போன்ற திருநங்கைகளுக்கு உட்பட பலருக்கும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே டீ, காபி குடித்த கிளாஸை ஜிங்கில் வைக்கச்சொல்லி பிரியங்காவுடன் சேர்ந்து ஹவுஸ் மேட்ஸ்க்கு அறிவுறுத்தும்போது நமீதா சற்றே ஆவேசமானார்.
இதேபோல், தாமரை செல்வியுடன் எதார்த்தமாக தொடங்கிய உரையாடல், தாமரை செல்வியின் வெகுளித்தனமான பேச்சால் முரணாக கொஞ்ச நேரம் மாற, அதில் சற்று வருத்தம் அடைந்த நமீதா, தாமதமாக சென்று தாமரை செல்வியிடம் பேசினார். அப்போதும் கூட, ‘நான் அப்படித்தான் கோபத்தை காட்டினால், பின்பு அன்பை காட்டுவேன்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில் நமீதா தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனிடையே நமீதாவுக்கு கொரோனா இருந்ததாகவும் அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.
ஆனால் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின்படி, நமீதா பிக்பாஸ் செட்டுக்குள் தான் இன்னும் இருப்பதாகவும், சில இடைவெளிக்கு பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் நமீதா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.