இசையமைப்பாளர் ஜிப்ரான் தேர்ந்தெடுத்த படங்களுக்கு இசையமைக்கக் கூடியவர். வாகை சூடவா படத்தில் தொடங்கி இசையமைத்துக் கொண்டிருந்த ஜிப்ரான், ராட்சசன் படத்துக்காக மிகவும் பாராட்டுகளை பெற்றார்.
மெலோடி பாடல்களையும், சற்றே ஆழமான உணர்வுகளை தூண்டச் செய்யும் பாடல்களையும் உருவாக்கும் ஜிப்ரானின் பின்னணி இசைக்கு பிரியர்கள் அதிகம். இந்நிலையில் தமிழை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது குறித்து கமல் தன்னிடம் பேசியதை ஜிப்ரான் பகிர்ந்துள்ளார்.
ஜெய், நஸ்ரியா நடிப்பில், அனிஸ் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு உருவான படம் திருமணம் என்னும் நிக்காஹ். இந்த படத்துக்கு பின்னர் சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் அனிஸ் இயக்கும் திரைப்படம் பகைவனுக்கும் அருள்வாய். இப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
தான் இசையமைக்கும் பகைவனுக்கு அருள்வாய் படம் தொடர்பான விழா நிகழ்வில் பேசிய ஜிப்ரான், “ஒருமுறை கமல் சாருடன் கம்போசிங்கில் இருக்கும்போது அவர் கூறினார். தமிழை அதிகம் வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் தான் என கமல்ஹாசன் கூறியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் கமல்ஹாசனுடன் இணைந்து உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்களுக்கு பணிபுரிந்தார் என்பதும் இறுதியாக மாதவன் நடிப்பில் அமேசானில் வெளியான மாறா படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: “இறுதிச் சடங்குக்கு போகமாட்டேன்.!”.. ரசிகரின் தற்கொலை தொடர்பாக உருகிய KGF Yash!