தல அஜித் - எச். வினோத் - போனிகபூர் முதன்முறையாக இணைந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியானது.
ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சுமார் 181 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது.
பின்னர் இதே கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தது. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது. 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், Single பாடல் என அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தின. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் தல அஜித் - போனிகபூர் - எச். வினோத் மூன்றாவது முறையாக மீண்டும் இணைவதாக தகவல்கள் பரவி வருகிறது. இன்னும் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இருப்பினும் சமூக வலைதளங்களில் தல 61 பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த தல 61 படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் தான் இசையமைப்பார் என ரசிகர்கள் அவருடைய பழைய ஒரு டிவிட்டை தற்போது பரப்பி வருகின்றனர்.
இந்த டிவிட்டில் நேர் கொண்ட பார்வை படப்பிடிப்பில் தல அஜித்துடன் ஜிப்ரான் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளது. அப்பொழுது தல அஜித், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு "நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என கூறியதாக டிவிட்டில் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் தல அஜித்தின் அடுத்த பட இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.