ஜோக்கர் ரசிகர்களின் கவனத்துக்கு: உங்களுக்கு எந்த ஜோக்கர் பிடிக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோக்கர் என்ற கதாபாத்திரத்தின் மீது பெரும் ஈர்ப்பு கொண்டவர்கள் உலகெங்கும் பலர் உண்டு. ஜோக்கர் கதாபாத்திரமும் பேட்மேனும் காமிக் ரசிகர்களின் விருப்பத்துக்குரியவர்கள். இன்னும் சொல்லப் போனால், பேட்மேனை விட ஜோக்கரையே விரும்பும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு. காரணம் பேட்மேனுடன் நேருக்கு நேர் மோத ஜோக்கரின் மெல்லிய உடல்வாகு இடம் கொடுக்காது. ஒல்லியான உயரமான அழகற்ற உருவத்தோற்றதுடன் இருக்கும் ஜோக்கரை பெரும்பாலனவர்கள் தங்கள் பார்வையிலிருந்தே புறக்கணிப்பார்கள். அவன் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும் புறத்தோற்றத்தை வைத்து மதிப்பிட்டு அவனை கேலிக்குரியவனாக்கவே இந்த உலகம் முயலும். உளவியல்ரீதியாக அணுகக்கூடிய இந்தக் கதாபாத்திரத்தை மெச்சும் கோடானுகோடி ரசிகர்கள் உணர்வது என்னவெனில் பேட்மேனுக்கும் ஜோக்கருக்கும்தான் 'சபாஷ், சரியான போட்டி' என்பதே.

DC காமிக்ஸ் உருவாக்கிய இந்த ஜோக்கர் கதாபாத்திரத்தை புத்தகத்திலிருந்து வெளியேற்றி சின்னத்திரைக்கு கார்டூனாக கொண்டு வந்தனர். அதன்பின் வீடியோ கேம் நாயகனாகவும் சில காலம் ஜோக்கர் வலம் வந்தான். காலம் கனிந்து ஜோக்கரை ஒருவழியாக வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தனர் ஹாலிவுட் இயக்குனர்கள்.

ஜோக்கரின் முகம் எப்படியிருக்கும் என்ற பேராவலில் ரசிகர்கள் திரையரங்குக்கு வந்தனர். 1966-ம் ஆண்டு ’தி பேட்மேன் சீரீஸ்’ படத்தில் சீஸர் ரொமிரோ 'ஜோக்கர்' கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். தங்களின் ஆதர்ஸ நாயகனுக்கு கார்டூனை மீறிய நிஜ முகம் கிடைத்ததால் மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். வெகு காலம் ஜோக்கரின் அடையாளமாக இருந்தவர் சீஸர் ரொமிரோதான்.

அதன்பின் தி கில்லிங் ஜோக் உட்பட அனிமேஷன் படங்களில் வந்த ஜோக்கர்களை வரவேற்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜாக் நிக்கல்ஸனை ஜோக்கராக பார்த்தவர்களுக்கு அது ஒரு பரவசமான அனுபவமாகவே இருந்தது. 1989-ல் டிம் பர்டின் இயக்கத்தில் வந்த 'பேட்மேன்' படத்தில் ஜோக்கராக அவரது நடிப்பாற்றலும் ஜோக்கர் கதாபாத்திரத்தை உள்வாங்கிய விதமும் அன்றைய ஜோக்கர் ரசிகர்களின் ஏகோபத்திய பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது. அதன்பிறகுதான் திரையுலகில் ஜோக்கர் கதாபாத்திரத்தின் மீது தனி ஈர்ப்பும் கவனமும் குவியத் தொடங்கியது. ஜாக் நிக்கல்சனை பாராட்டிய ரசிகர்கள் அடுத்து யார் அந்தக் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.

2008-ம் ஆண்டு அது மீண்டும் நிகழ்ந்தது. ஆனால் அந்த நடிகரின் பெயரைக் கேட்டதும் இவரா ஜோக்கர் என்று மீடியாவும் இணையதளத்திலும் அவதூறாக விமர்சிக்கப்பட்டது. ஜோக்கருக்கு களங்கம் விளைத்துவிடுவார் கிறிஸ்டஃபர் நோலனின் தேர்வு தவறாகிவிடப் போகிறது என்று கேலி செய்தனர். அந்தப் படம் `பேட்மேன் : தி டார்க் நைட்'. விமர்சிக்கப்பட்ட நடிகர் : ஹீத் லெட்ஜர். பேட்மேன் என்ற சூப்பர் ஹீரோவின் கருவையும், அதே அளவுக்கு சக்தியுள்ள வில்லன் ஜோக்கரின் போராட்டங்களையும் திரைவழியே மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தியவர் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன். வழக்கமான சூப்பர் ஹீரோக்களின், படங்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிந்தது இவருடைய `பேட்மேன்' பட வரிசை.

பேட்மேன் திரைப்படத்தின் முதல் பாகமான பேட்மேன் பிகின்ஸ் படத்தில் பேட்மேனாக நடிக்க ஹீத் லெட்ஜரைத்தான் முதல்முதலாக அணுகியிருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். ஆனால் சூப்பர் ஹீரோ படங்களில் நடிக்க ஆர்வமில்லை என்று அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஹீத் லெட்ஜர். அதன்பின் கிறிஸ்டியன் பேலை வைத்து படத்தை வெற்றிகரமாக முடித்தார் நோலன். படத்தின் வரவேற்பைப் பார்த்த ஹீத் லெட்ஜர் அந்தக் கதாபாத்திரத்தை தவறவிட்டதற்கு வருந்தினார்.

ஆனால் வருத்தப்பட்டதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதன் அடுத்த பாகமான தி டார்க் நைட்டில் ஜோக்கர் கதாபாத்திரத்தை தான் ஏற்று நடிக்க விரும்புவதாக நோலனைச் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்தார். உடனடியாக நோலன் அதற்கு ஒப்புக் கொண்டார்.  இந்தத் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பைப் பார்த்துதான் ஜோக்கர் ரசிகர்கள் வெகுண்டு ஹீத் லெட்ஜருக்கும் ஜோக்கருக்கும் என்ன சம்மந்தம், நோலனுக்கு என்ன நேர்ந்தது எனும்படியான விமர்சனங்களை அள்ளித் தெளித்தனர்.

இதையெல்லாம் அவதானித்த ஹீத் லெட்ஜர் மனம் உடைந்து போகவில்லை. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஜோக்கர் கதாபாத்திரத்துக்குத் தன்னை தயார்படுத்த தொடங்கினார். அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்க ஹீத் லெட்ஜர் கொடுத்த விலை இதுவரை யாரும் கொடுக்காதது. ஆம். உயிரைக் கொடுத்து நடித்தேன் என்று சில நடிகர்கள் சொல்லக்கூடும். உண்மையிலேயே தன்னுயிரை இந்தக் கதாபாத்திரத்துக்காக சுய பலி கொடுத்தவர் ஹீத் லெட்ஜர். பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகன் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஏன் சில மாதங்கள் கூட அதன் பாதிப்பிலிருந்து வெளிவருவது கடினம். அதுவும் ஜோக்கர் போன்ற உளவியல் சிக்கல்களை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு அதிலிருந்து மீள ஹீத் லெட்ஜர் கொடுத்த விலைதான் அவரது இன்னுயிர்.

ஜோக்கராக தன்னை உருவாக்கிக் கொள்ள ஹீத் லெட்ஜர் 43 நாள்கள் தனிமையாக ஒரு விடுதியில் தங்கிவிட்டார். ஒரு டைரியில் ஜோக்கர் என்ன செய்வான், எப்படி சிந்திப்பான் அவனது நடை உடை எப்படி இருக்கும். அவன் எப்படி சிரிப்பான் என்று பல விஷயங்களையும் நுணுக்கமாக எழுதிவைத்தார். படப்பிடிப்பின் போது நோலன் சொன்ன விஷயங்களைத் தாண்டியும் ஹீத் லெட்ஜரின் அர்ப்பணிப்பான பங்கேற்பு அந்தக் கதாபாத்திரத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்தியது.

அந்த விடுதி அறையில் தங்கியிருந்த காலகட்டத்தில் ஹீத் லெட்ஜர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி படுத்திக்கொண்டார். அவரது தனிமை தவத்தை அதன் பலனை திரையில் பிரதிபலித்த போது முன்பு அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். ஜோக்கர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் பெரும் கைதட்டல் பெற்றது. ஹீத் லெட்ஜரின் அட்டகாசமான நடிப்பும், வசன உச்சரிப்பும் கோணல் சிரிப்பும் உடல்மொழியும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தந்தது. இவ்வகையில் ஜோக்கருடைய கதாபாத்திரத்தை காலத்தில் நிலைக்கச் செய்தார் ஹீத் லெட்ஜர்.

ஆனால் ஹீத் லெட்ஜரின் அசகாய நடிப்புக்குக் கிடைத்த பெருமதியான ஆஸ்கர் விருதை வாங்குவதற்குக் அவர் உயிருடன் இல்லை என்பதுதான் பெரும் சோகம்.  மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை பிரச்னையால் பாதிப்படைந்திருந்த ஹீத் லெட்ஜர் தி டார்க் நைட் படம் வெளிவருவதற்கு ஆறு மாதங்கள் முன்னரே மரணம் அடைந்தார். 

ஹீத் லெட்ஜர் ஜோக்கரின் உருவச் சிறப்பை வெகு சிறப்பாக உலகிற்கு எடுத்துக் காண்பித்த அவர் மரணத்தின் முன் மண்டியிட்டு காற்றில் கரைந்துவிட்டார். அதன் பின் ரசிகர்கள் வெறொருவரை இனி ஜோக்கராக நினைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு ஏற்றபடியே டி.சி காமிக்ஸின் 2016-ம் ஆண்டு வெளியான `சூசைடு ஸ்குவாடு' படத்தில் ஜாரெட் லிடோ ஜோக்கறாக நடித்தார். ஆனால் ஜோக்கரின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை அவரால் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. படம் தோல்வியடைந்தது. பலவிதமான எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளானார் ஜாரெட் லிடோ.  

இப்படி ஜோக்கர் கதாபாத்திரம் தன்னை ஏற்று நடித்த நடிகர்களை பலவிதமாக பாதிப்படையச் செய்தபடி ரசிகர்களின் மனங்களில் ஊடாடிக் கொண்டிருந்தது. சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜோக்கரைப் பற்றி தனிப் படம் வெளியாகவிருக்கிறது என்ற தகவலை ஹாலிவுட் திரையுலகம் வெளியிட்டது. அது முழுக்க முழுக்க ஜோக்கரின் பின்னணி கதையை சொல்லும்விதமாக முதன்முறையாக ஜோக்கருடைய 'ஸ்டாண்டு அலோன்' படமாக இருக்கும் என்றனர். அப்படத்தில் ஜோக்கராக நடிக்க ஹாக்வின் ஃபீனிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் மறுபடியும் ரசிகர்க்ளின் வெறும் வாய்க்கு அவலானது.

கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக புனைவாய் உள்ள ஜோக்கர் கதாபாத்திரத்துக்கென பிரத்யேக கதை உள்ளது. அதைத்தான் ஹாக்வின் பீனிக்ஸ் நடிப்பில் ‘தி ஜோக்கர்’ என்ற முழு நீள திரைப்படமாக எடுக்க முன்வந்தார் இயக்குனர் டாட் பிலிப்ஸ்.

பொதுவாக, சூப்பர் ஹீரோக்களுக்கு தனித்துவமான கதை என்று ஒரு படமோ, அடுத்தடுத்த பாகங்களோ வெளியாகும். மார்வெல்லின் மொத்த சூப்பர் ஹீரோக்களின் குவியலாக `அவெஞ்சர்ஸ்' படம் வெளியான அதே காலகட்டத்தில், டி.சி.காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களின் மொத்தக் குவியலாக `ஜஸ்டிஸ் லீக்' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.  வொன்டர் வுமன் 1984 படத்தையும் ப்ளாக் விடோ படத்தையும் அடுத்த ஆண்டில் களம் இறக்கவிருக்கின்றனர் இந்த நிறுவனங்கள். இதையும் தாண்டி சூப்பர் ஹீரோக்கள் மற்றும் சூப்பர் வில்லன்களின் படங்களும் வெளிவரத் தொடங்கின. கிட்டத்தட்ட எல்லா சூப்பர் ஹீரோவுக்கும் தனி தனிப் படங்கள் உள்ளன. போலவே, சூப்பர் வில்லனான ஜோக்கருக்காக வெளிவந்த படம்தான் ஹாக்வின் ஃபீனிக்ஸ் நடித்த தி ஜோக்கர்.

இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த ஜோக்கர் பட வரிசை ரசிகர்கள் பரபரப்பானார்கள். அனைவரின் கவனத்தையும் ஒட்டுமொத்தமாக பெற்று படத்துக்கான எதிர்ப்பார்ப்பை உருவாக்கிவிட்டனர் படக்குழுவினர். இப்படத்தில் வரும் ஆர்த்தர் ஃபலெக் அதாபாத்திரம் டிஸி காமிஸ்லிருந்து எடுக்கப்பட்டது. ஜோக்கரை உளவியல்ரீதியாக அணுகியிருக்கும் இப்படத்தில் ஜோக்கருக்கு `சூடோபல்பர் எஃபெக்ட் (Pseudobulbar affect (PBA))' என்ற நோய் உள்ளதாகக் காட்சிப்படுத்தியது.   கடும் மன அழுத்தத்தில் சிரிக்கத் தொடங்கினால் அந்தச் சிரிப்பை அவனால் நிறுத்தவே முடியாது. தன் கையில் அத்தகைய நோயைப் பற்றிய குறிப்பை சுமந்து செல்லும் அவலம் அவனுக்கு உண்டு. இப்படி சிறுகச் சிறுக மன அழுத்தத்தினால் அவனுக்கு ஏற்பட்ட நோய்க்கு இந்தச் சமூகமும் அடுத்தவரை ஒடுக்கி வாழும் சில மனிதர்கள்தான் காரணம்.

ஒரு மனிதன் ஏதோ ஒரு காரணத்தால் இச்சமூகத்தால் ஒடுக்கப்படும்போது ஏற்படும்  மன அழுத்தம் பெரும்பாலும் மென்மனம் உடையவர்களால் தாங்கவியலாதது. இத்தகைய அழுத்தம் தொடர்ந்து ஜோக்கரை பாதிக்கிறது.  சந்தர்ப்பம் அறியாமல் அடக்க மாட்டாமல் சிரிப்பது, மனம் கொந்தளித்து குமுறி அழுவது என்று அற்புதமான நடிப்பினால் ரசிகர்களை நெகிழச் செய்துவிட்டார் ஹாக்வின் பீனிக்ஸ்.

ஹீத்லெஜ்டரால் உருவான ஜோக்கர் வெளிமுகமாக இருந்தால்,  ஹாக்வின் பினிக்ஸின் ஜோக்கரின் அந்தரங்கமான முகம். ஹீத்தின் பாதிப்பு தனக்கு துளியளவும் வரக்கூடாது என்று மெனக்கிட்டு நடித்திருப்பார் ஹாக்வின். தன்னுடைய உடல் எடையை கிட்டத்தட்ட 25 கிலோவாக குறைத்து எலும்பும் தோலுமாக முகம் ஒட்டி ஜோக்கராக உருமாற்றம் அடைந்திருப்பார்.

இவ்வாறாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு முகத்தின் தன் சாயலை ஏற்று பவனி வந்து கொண்டிருக்கும் ஜோக்கரின் கதாபாத்திரத் தன்மையை கடைசியாகப் பொலிவடையச் செய்தவர் ஹாக்வின் ஃபீனிக்ஸ். அவரது சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது ஜோக்கர் கதாபாத்திரம்.

'டார்க் நைட்' வெளியாகி கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகள் ஆனாலும் இதுவரை வந்த ஜோக்கர் கதாபாத்திரங்களில் நோலன் உருவாக்கியதையே இன்றளவும் கொண்டாடி வருகின்றனர் உலகத் திரை ரசிகர்கள். காரணம் ஹீத் லெட்ஜர் என்ற கலைஞனின் ஆத்மார்த்தமான பங்களிப்பு. ஜோக்கரைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களையும் கூட ஜோக்கரை முதல் முதலில் கண்களுக்குள் கொண்டு வந்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இன்று ஜோக்கர் என்றால் ஹீத் லெட்ஜரின் உருவத்தைத் தான் வரைபடமாக்குகிறார்கள் ரசிகர்கள்.

ஜோக்கர் ரசிகர்களின் வாழ்த்துகளை ஹாக்கின் ஃபீனிக்ஸ் பெற்றிருந்தாலும் ஹீத் லெட்ஜரின் ஜோக்கருக்கான இடம் அவருக்கேயானது. அதை இன்னொருவரால் இட்டு நிரப்ப முடியாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. வெளுத்த முகத்துடனும் கிழிந்த வாயுடன் ஜோக்கராக ஹீத் லெட்ஜர் ரசிர்களின் மனதின் அடியாழத்துக்குள் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்.

சிறந்த ஜோக்கர் கதாபாத்திரம் | who is best Joker

People looking for online information on Christopher Nolan, Dark Knight, Heath Ledger, Jaq, Joaquin Phoenix, The Joker will find this news story useful.