கொரோனா தொற்று பரவல், கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில், இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் இதன் பாதிப்பு, பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
அதே வேளையில், ஒமைக்ரான் தொற்றின் பரவலும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல மாநில அரசுகள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பல்வேறு கட்டுப்பாடுகள்
பொது இடங்களான ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உள்ளிட்ட இடங்களில் மக்கள் தேவையில்லாமல் கூடவும் பல்வேறு தடைகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதில், திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, இரவு நேர ஊரடங்கையும் அறிவித்திருந்தது.
திரையரங்கிற்கும் தடை
தமிழகம் மட்டுமில்லாது, பல மாநிலங்களும் திரையரங்குகள் செயல்பட கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதன் காரணமாக, பொங்கல் நேரத்தில் வெளியாகவிருந்த தெலுங்கு படங்களான 'RRR', ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் தங்களது ரிலீஸை தள்ளிப் போடுவதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகவிருந்த 'வலிமை' திரைப்படமும், பொங்கலுக்கு வெளியாகவிருந்த நிலையில், தற்போது தள்ளிப் போவதாக, தற்போது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்படும் வசூல்
ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என். டி. ஆர் ஆகியோர் நடித்த 'RRR' திரைப்படம், சுமார் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போல, பிரபாஸ் நடிப்பில் உருவான 'ராதே ஷ்யாம்', படமும் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போல, அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படமும், சுமார் 100 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்படும் காட்சிகள்
பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அடுத்தடுத்து தள்ளிப் போவதால், சினிமா ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், இதற்காக பல காரணங்களும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் மற்றும் நாடுகள், திரையரங்குகளுக்கு 50 சதவீதத்தையும், முழு தடையையும் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல், இரவு நேர ஊரடங்கும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது.
மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, திரையரங்கில் வெளியானால் கூட, மிகப் பெரிய அளவில் வசூலைத் தொட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதே போல, இரவு நேர ஊரடங்கின் காரணமாக, இரவு நேரக் காட்சிகளும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதால், நிச்சயம் படங்கள் வெளியானால் கூட, ஒரு நாளைக்கு 3 காட்சிகள் திரையிடப்படுவதே அரிதான ஒன்று தான்.
மற்றொரு காரணம்
இன்னொரு பக்கம், ஒரு வேளை படங்கள் ரிலீஸ் ஆனால் கூட, திரையரங்கில் கூட்டம் கூடுவதன் காரணமாக, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், இப்படி பல தரப்பிலான விஷயங்களை கருத்தில் கொண்டு, திரைப்படங்கள் சற்று கடினமான முடிவுகளை எடுத்துள்ளது.
கொரோனா பரவல் குறைவாகி, மீண்டும் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பும் போது, தள்ளிப் போன படங்கள், தங்களது படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.