குறும்பட கலாச்சாரம் என்கிற ஒன்று தமிழ் சினிமாவில் முக்கிய அலையாக பார்க்கப்பட்டது.
புதிய கதைகளையும், புதிக களங்களையும் கையில் எடுத்துவந்த இயக்குநர்கள் பலரும் பட்ஜெட்டுக்கு தகுந்த கதைகளை குறைந்த முதலீட்டில் உருவாக்க நினைத்தனர். இதன் காரணமாக அவர்கள் கவனம் செலுத்தியது திரைக்கதைகளிலும் மேக்கிங்கிலும் தான். அப்படித்தான் நலன் குமாரசாமி இயக்கத்தில் சூது கவ்வும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சா உள்ளிட்ட படங்களின் அணிவகுப்புகள் வரத் தொடங்கின.
இந்த வரிசையில் கவனிக்கப்படும் இயக்குநராகவே மாறிப்போனார் கார்த்திக் சுப்புராஜ். பின்னர் ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தனக்கென்று தனிப் பாணியை உருவாக்கிக் கொண்ட கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் இறைவி படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாக ஆதரவு பெருகியது. பின்னர் ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படத்தையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் நடிப்பில் சீயான்60 படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதனிடையே தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வரும் ஜூன் 18-ஆம் தேதி 17 மொழிகளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான Y Not Studios உறுதிப் படுத்தியது.
தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் தான் பிரபல Braveheart, Troy, Game of Thrones படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (James Cosmo) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஜேம்ஸ் காஸ்மோ, “நான் என் படப்பிடிப்பின் சிறந்த நேரத்தை இந்தியாவில் கொண்டிருந்தேன் - என்ன ஒரு அற்புதமான நாடு! நீங்கள் அபரிமிதமானவர்கள்! மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்! #ஜகமேதந்திரம்!” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: வாத்தி கம்மிங்.. பிரபல சேனலில் BehindwoodsGoldIcons விருது விழா! தெறிக்கவிடும் Promo!