கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமான திரைப்பட படப்படிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து திரைப்படம் சார்ந்து பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து FEFSI எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உதவுமாறு வேண்டுகோள்விடுத்தார். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்கத்திற்கு உதவுமாறு அதன் தனி அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''ரஜினி சார், கமல் சார், விஜய் சார், அஜித் சார் உங்க எல்லோருக்கும் வணக்கம். நடிகர் சங்கம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கு. ஐசரி கணேஷ் சார் ரூ.10 லட்சமும் கார்த்தி சார் ரூ.2 லட்சமும் கொடுத்திருக்காங்க. மற்றவர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்கிறார்கள்.
நான், பூர்ணிமா, லதா, சங்கீதா, உதயா, உள்ளிட்டோர் கொஞ்சம் பணம் போட்டு ரைஸ் பேக் அரேஞ்ச் பண்ணிருக்கோம். இருப்பினும் 25 லட்சம் இருந்தா தான் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாயாவது கொடுக்க முடியும். நீங்க நாலு பேரு நினச்சீங்கனா எதையும் சாதிக்க முடியும். உங்களை கெஞ்சிக்கேட்டுக்கிறேன். தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்து நலிந்து போன கலைஞர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.