புற்றுநோய்க்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் தவசி (60). காமெடி, குணச்சித்திர வேடங்களில் சுமார் 140 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் பேசிய 'கருப்பன் குசும்புக்காரன்' என்னும் வசனம் இவருக்கு பெருமளவில் ரசிகர்களை ஈட்டித்தந்தது.
சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே மெலிந்து அடையாளம் தெரியாத வகையில் உருமாறிப்போன தவசியின் புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிகிச்சைக்கு பணமின்றி கஷ்டப்பட்ட அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் பணமளித்து உதவி செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்தும் தொலைபேசி வழியாக பேசி நலம் விசாரித்து இருந்தார். இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையறிந்த ரசிகர்கள், பிரபலங்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்து தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.