ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவரது வாழ்க்கை, ஒரு ஓட்டப் பந்தயமாகவே இருக்கிறது. அவருடைய அப்பாவுக்கு அவரை பிடிக்காததால், விட்டுச் சென்றுவிட, 14-15 வயது வரை பல பாரங்களை சுமந்து வளர்ந்தவர் விஜே மகேஸ்வரி. சிறு வயதில் மிஸ் பண்ணிய விசயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எல்லாமே திருமணம் வாழ்க்கையில் சரி ஆகிவிடும் என நினைத்தவருக்கோ, அங்கும் ஏமாற்றம்தான். பெரிய கனவோடு நடந்த அவருடைய திருமணம் அடுத்த ஒன்றரை வருடத்தில் உடைந்தது.
ஆனாலும் அதில் இருந்து அவருக்கு கிடைத்த சந்தோஷம், அவரது மகன். பின்னர் மகனுக்காகவே வாழ தொடங்கிய மகேஸ்வரி, கொரோனா காலத்தில்தான் மகனுக்கு இன்னும் சேர்த்து வைக்க வேண்டியவை இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளார். வீட்டின் பொருளாதார நிதி, மகனின் கல்விக்கான செலவுகள் என பலவற்றையும் குறித்து யோசித்த மகேஸ்வரி, காஸ்டியூம் டிசைனிங், இண்டீரியர் டிசைனிங் உள்ளிட்ட படிப்புகளை படித்து, அவற்றில் பணிபுரிந்துள்ளார்.
இப்படி பிஸியான வாழ்க்கையில் தான் இருக்க, மகனின் வளர்ச்சி, பழக்க வழக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை குறித்து கவலைப்பட்ட மகேஸ்வரி, மகனை விடுதியில் சேர்த்துவிட்டு பின்னர் மிகவும் மகனை பிரிந்து கவலைப்பட்டுள்ளார். தன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற அப்பா மற்றும் தன் கணவர் ஆகியோர் கொடுத்த அனுபவங்களால் ஆண்கள் மேல் நம்பிக்கை இழந்த மகேஸ்வரி, ஆண்களே சுயநலவாதிகள் என நினைத்துள்ளார்.
ஆனால் தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த அந்த அழகான ஆணாக, தன் மகனை குறிப்பிடும் மகேஸ்வரி, தன் மகன், தான் சந்தித்த ஆண்கள் போல் அல்லாமல், மிகவும் அன்பான, பொறுப்பான குடிமகனாக, அற்புதமான மனிதராக வளர வேண்டும் என விரும்புகிறார். மகனின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு பிக்பாஸில் விளையாடிவிட்டு வருவேன் என்கிற நம்பிக்கை உள்ளதாக கூறிவிட்டு விஜே மகேஸ்வரி, பிக்பாஸ்க்குள் சென்றுள்ளார்.