மகனுடன் குடும்பத் தலைவரையும் இழந்த விவேக்கின் குடும்பம்! "அழுத்தமாக இருந்தார்" - பிரேமலதா.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

59 வயதில் காலமான நடிகர் விவேக்கின் மறைவால் திரைத்துரையினர் ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே விவேக்கின் உடல் அரசு முறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

முன்னதாக  நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது, அங்கு பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எல்லோரையும் சிரிக்க வெச்சாரு.. தனது மகன் மரணத்துக்கு அப்புறம் அழுத்ததுடன் இருந்ததை பார்த்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.  நடிகர் விவேக்கிற்கு இரண்டு மகள்கள் பிறந்த நிலையில் மூன்றாவதாக பிறந்த மகன் பிரசன்ன குமார் மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்த விவேக், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தமது மகன் பிரசன்ன குமாரை இழந்தார். அதன் பின்னர் அதில் இருந்து மீளும் விதமாக அப்துல் கலாமின் ஒரு கோடி மரம் நடும் லட்சியப் பணியை தொடங்கி, 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.

முன்னதாக இசையார்வம் கொண்டிருந்த தம் மகன் பிரசன்ன குமார் 18 வயதில் சிறந்த இசையமைப்பாளராக வருவார் என விவேக் எதிர்ப்பார்த்த நிலையில் அவரது மகன் 13 வயதில்  40 நாட்கள் மருத்துவமனையில் போராடி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். டெங்குவுக்கு எதிராகவும் விவேக் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த நிலையில், தம் மகனே டெங்குவுக்கு பலியான சோகத்தில் விவேக் இடிந்து தான் போனார்.

ALSO READ: "சிவனோட ஒரு சிட்டிங்...எமனோட ஒரு கட்டிங்".. பரவும் விவேக்-ன் மாஸ் பேச்சு!

அதன் பின்னர் விவேக் தமது மகனை குறிப்பிட்டும் கூட பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக ஒரு உருக்கமான கட்டுரையை பதிவிட்டிருந்தார். அதில், “இதுவரை ‘புத்திர சோகம்' என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள்.

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.

கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்'களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?'. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna' என்று என்னை அலெர்ட் செய்கிறது.  எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..! ”என்று குறிப்பிட்டிருப்பார். 

இந்நிலையில் 13 வயது மகனை இழந்த நிலையில் குடும்பத் தலைவரையும் இழந்த சோகத்தில் விவேக் குடும்பத்துக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ALSO READ: விவேக் மறைவுக்கு வந்த கவுண்டமணி! இருவரின் கலைப் பயணத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?

மகனுடன் குடும்பத் தலைவரையும் இழந்த விவேக்கின் குடும்பம்! "அழுத்தமாக இருந்தார்" - பிரேமலதா. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vivekh heartmelt letter after he lost his 7 yrs old son

People looking for online information on Premalatha Vijayakanth, RIPVivek, Vivekh will find this news story useful.