59 வயதில் நகைச்சுவை நடிகர் விவேக் மரணமடைந்துள்ள செய்தி தமிழ் திரை உலகை மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடல் அரசுமுறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே விவேக்கின் கலை சேவைகள் ,சமூகப்பணிகள், அவர் குறித்து யாரும் அறியாத மறுபக்கங்கள் உள்ளிட்ட பல அரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் நடிகர் விவேக் முதன்முதலில் பாடி நடித்துள்ள திரைப்படம் குறித்த தகவல்களை அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா என்கிற உதயன் விக்டர் நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்திருக்கிறார். அதன்படி விவேக் முதன்முதலில் பாடி நடித்த திரைப்படம் நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் தான். ஆம், நடிகர் விக்ரம், சௌந்தர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்டேன் சீதையை. பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படம் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு இரண்டாவதாக விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கண்டேன் சீதையை. இந்த படத்தில் தான் நடிகர் விவேக் முதன் முதலில் பாடி நடித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா, “தெலுங்கு திரைப்படமான இந்த படம் தமிழில் கண்டேன் சீதையை என்கிற பெயரில் டப்பிங் செய்வதற்கான உரிமம் வாங்கப்பட்டது. ஆனால் அப்படியே டப்பிங் செய்யாமல் அந்தத் திரைப்படத்திற்கு மீண்டும் இசை அமைத்து பாடல் பணிகளை மேற்கொண்டோம். அந்நேரத்தில் பிஸியாக இருந்த நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கை இந்த படத்தில் பாடவைப்பதென திட்டமிட்டோம். அதற்கு காரணம் விவேக் கலைவாணர் போலவே பகுத்தறிவு, சமூக கருத்துக்களை திரையில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததுதான்.
அப்போது விவேக்கிடம், ‘சார், உங்களை நடிகராக பாடவைக்கட்டுமா? அல்லது ஒரு பாடகராக பாட வைக்கட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் கேட்டார், ‘இரண்டுக்கும் என்ன சார் வித்தியாசம்’ என்று. அப்போது நான் சொன்னேன், ‘நடிகர் என்றால் நீங்கள் எப்படி பாடினாலும் நான் எடுத்துக் கொள்வேன்! ஆனால் பாடகராக பாடவைத்தால், ஒரு இசையமைப்பாளராக எனக்கு என்ன தேவையோ அதை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தான் விடுவேன்’ என கூறினேன். அப்போது விவேக் சிரித்தபடி, ‘என்னை பாடகராகவே பாட வையுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அப்படி உருவானதுதான் ‘விஞ்ஞானத்தை நம்பி நீ தூங்காதடா தம்பி’ என்கிற என்ற பாடல்.
பகுத்தறிவையும் சமூக கருத்தையும் உள்ளீடாக வைத்து விவேக் பாடிய இந்த பாடலை சிநேகன் எழுதினார். விவேக் சார் மிகவும் எளிமையானவர். கடின உழைப்பாளி. கலையோ சமூக சேவையோ எதுவாயினும் முழு அர்ப்பணிப்போடு செய்பவர். இந்த பாடலை கூட 2 மணி நேரங்கள் முழுமையாக பாடிக் கொடுத்தார்.” என தெரிவித்தார்.
இதில் ஒரு தகவல் என்னவென்றால் விவேக் இறந்த ஏப்ரல் 17 தான் விக்ரம் அவர்களின் பிறந்த நாள். ஆனால் விக்ரம் தன் இந்த பிறந்த தினத்தை பெரிதாக கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பாடல் இதுதான்..