பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், எக்ஸிட் போல் குறித்து பகிர்ந்த சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கியதுடன் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், சர்ச்சைக்குரிய வகையிலான மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த மீமில் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் சொந்த வாழ்க்கை குறித்த சர்ச்சைக்குரிய தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.
விவேக் ஓபராயின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த சர்ச்சை பெரிதானதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ஓபராய், மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் நன் பகிர்ந்ததில் என்ன தவறு? நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்பேன். நான் செய்ததில் என்ன தவறு என கூறினார்.
இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய மீம்-ஐ நீக்கிவிட்ட விவேக் ஓபராய், ‘ஒருசிலரால் நகைச்சுவையாக பார்க்கக்கூடிய விஷயம் பிறரால் அப்படி பார்க்கப்படுவதில்லை. நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2000 பெண்களின் முன்னேற்றத்திற்காக உதவியிருக்கிறேன். எனினும், எனது பதிவு சிலரது மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.