தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் இதற்கு முன்பாக 'எஃப்ஐஆர்' படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது விஷ்ணு விஷால் மற்றும் 'பொன்னியின் செல்வன் பூங்குழலி' ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படம், டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.
செல்லா அய்யாவு இயக்கி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம், குஸ்தி சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. இதன் ட்ரைலர் அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ரீலீஸையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனிடையே, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் இணைந்து Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், கட்டா குஸ்தி திரைப்படம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும், சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் சர்ச்சை ஃபோட்டோ ஒன்று பெரிய அளவில் கருத்துக்களை பெற்றிருந்தது.
இதுகுறித்து பேசிய விஷ்ணு விஷால் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, "அந்த போட்டோவை பார்த்துவிட்டு எனது நண்பர்கள் பலரும் நான் தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன் என்று கூறினார்கள். ஏனென்றால் அப்போது நான் இவருடன் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்" என சிரித்துக் கொண்டே கூறினார்.
மேலும் இது பற்றி விளக்கம் கொடுக்கும் விஷ்ணு விஷால், "அந்த ஃபோட்டோ கிளிக் பண்ணது என் வைஃப் தான். என்ன போட சொன்னதும் என்னோட வைஃப் தான். உண்மையா அந்த போட்டோ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கிளிக் பண்ணது. அந்த சமயத்தில் போட வேண்டாம் என முடிவு எடுத்தோம். அப்படி இருக்கையில் ரன்வீர் சிங் ஃபோட்டோ வந்தது. அவர்கள் செய்யும் போது ஏன் நாம் செய்யக்கூடாது என மனைவி கேட்டார். பெண்களும் அப்படி செய்யும் போது ஏன் நாம் போட முடியாது எனக் கேட்டார். அவர் சொன்னதுக்கு பிறகு நான் அந்த புகைப்படத்தை பகிர்ந்தேன். என்ன தான் ஆகிறது என்று பார்ப்போம் என்ற முடிவில் தான் போட்டேன் என்றார்.
தொடர்ந்து இந்த போட்டோ குறித்த விமர்சனம் பற்றிய கருத்துக்களை தெரிவித்த விஷ்ணு விஷால், "நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். நான் தப்பா எதுவும் பண்ணல. எத போட முடியுமோ அதுதான் போட்டு இருக்கேன். அதை மீறி போடு நான் லூசா என்ன. கண்டிப்பா தப்பா பேசுவாங்கன்னு தெரியும். தெரியாம எல்லாம் நான் போடல.
நான் இதுக்கு முன்னாடி நிறைய நல்ல போட்டோக்களை எல்லாம் பகிர்ந்துள்ளேன். ஆனால் இந்த ஒரு போட்டோவுக்கு வந்த ரெஸ்பான்ஸ் வேற எந்த போட்டோவுக்கு எனக்கு வந்ததில்லை. ஒரு சின்ன நெகட்டிவிட்டி இருந்தால் அது எந்த அளவுக்கு பிரபலமாகும் அப்படின்றதுக்கு எனக்கு இந்த ஒரு போட்டோ போதும். நெகட்டிவிட்டியே இல்லாத போது யாரும் பெருசா பேசல. நெகட்டிவ் இருக்கும்போது எல்லா மீடியாவும் பேசுனாங்க, நார்த் மீடியா வரைக்கும் பேசுனாங்க.
என் மீதான ஒரு இமேஜை உடைக்கத் தான் அந்த புகைப்படத்தை நான் பகிர்ந்தேன். நடிகராக எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று தெரிய வேண்டும். என்ன பாக்குற ஒரு கண்ணோட்டம் மாறணும். எவ்வளவு நாளைக்கு தான் ஒரு நல்ல பையனா, நல்ல ரோல் மட்டும் பண்ணுனேன்னு எனது இமேஜை உடைப்பதற்காக தான் இந்த புகைப்படத்தை பகிர்ந்தேன்" என தெரிவித்தார்.