தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாஸ் படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஷால்.
அண்மையில் விஷால் நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து விஷால் ஆர்யா இணையும் எனிமி திரைப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின.
அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் அடங்கிய படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்திற்காக விஷால் ஒப்பந்தமானார்.
பிரபல குறும்படமான., “எது தேவையோ அதுவே தர்மம்!” என்கிற குறும்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சரவணன் அந்த படத்துக்காக பல விருதுகளை பெற்று இருந்தார். இந்நிலையில் தான் இவர் விஷால் நடிக்கும் விஷால் 31 என்கிற இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலத்தில் இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த படத்துக்கான சண்டைக்காட்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதனைப் பகிர்ந்திருக்கிற விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஷால்31 படத்துக்கான படப்பிடிப்பை மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறோம். நீண்ட நாட்கள் இந்த படப்பிடிப்பை நடத்துவதற்காக திட்டமிட்டு ஜூலை முடிவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடிப்பதற்கு முடிவு செய்திருக்கிறோம்.
அனைத்து விதமான கட்டுப்பாட்டு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு பணிகளில் இணைவது மகிழ்ச்சி!” என்று தெரிவித்திருக்கிறார். இந்த படம் தொடர்பான பதிவுகள் #NotACommonMan என்கிற ஹேஷ்டேகின் கீழ் ஸ்டைல் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.