நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் தற்போது நடிகர் விஷால் நடித்து வரும் விஷால்-31 திரைப்படத்துக்கு ‘வீரமே வாகை சூடும்’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திரைப்படத்தை து.பா.சரவணன் இயக்குகிறார். தன்னுடைய பிறந்தநாள் அன்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த விஷால் செய்தியாளர்களிடம் பேசிய பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அப்போது பேசிய அவர், வடிவேலு மற்றும் சிம்பு மீதான ரெட் கார்டு விவகாரங்கள் பற்றி கேட்டபோது தயாரிப்பாளர் சங்கத்துடன் தொடர்புடைய இந்த விஷயத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியதுடன், ஒவ்வொரு இரவும் இக்கட்டான சூழ்நிலையில் மனம் கடினமாக இருக்கும் போது வடிவேலு காமெடியை காண விரும்புவதால், நிச்சயம் வடிவேலுவை, தான் மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா துறையை பொருத்தவரை ஜிஎஸ்டி, அதேசமயத்தில் உள்ளூர் வரி என இரண்டு வரிகளையும் கட்டும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. இதை மாற்றினார்கள் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று விஷால் பேசினார்.
மேலும் பேசியவர், “கிட்டத்தட்ட ஒன்றரை வருடம்... அனைவரின் வாழ்க்கையும் போய்விட்டது. தயாரிப்பாளர்கள் பலரும் படம் எடுத்துவிட்டு ஓடிடியில் வெளியிடலாமா.. திரையரங்கத்தில் வெளியிடலாமா.. என்று தவித்துக் கொண்டிருந்தனர். தற்போது திரைப்பட துறைக்கு நல்லது நடக்கும் என நம்புகிறேன். ஸ்டாலின் அங்கிள் முதல்வராக இருக்கிறார். நண்பர் உதய் எம்எல்ஏவாக இருக்கிறார். அவர்கள் சினிமா துறைக்கு நல்லது செய்வார்கள் என முழுமையாக நம்புகிறேன்.
நடிகர் சங்க விவகாரத்தைப் பொறுத்தவரை நான் யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை. கெடுதல் பண்ணும் எண்ணமும் வராது. அந்த நடிகர் சங்க கட்டிடம் ஒருவேளை கேஸ் போடாமல் அவர்களே கட்டி முடித்து இருந்தால், உண்மையில் நாங்கள் ஒரு ஓரமாக நின்று கட்டிடத்தின் வளர்ச்சியை வேடிக்கை பார்த்திருப்போம். கடந்த 2,3 ஆண்டுகளாக 200 பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
இந்த நடிகர் சங்க கட்டடம் என்பது தனி மனிதனின் முயற்சி அல்லது புகழ்ச்சி அல்ல. இது ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க நடிகர்களுக்கும் ஒரு பெரிய பொக்கிஷமாக இருக்க வேண்டும். எல்லாரும் சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை இவ்வளவு சிறப்பாக கட்ட எண்ணினோம்.
இல்லையென்றால் மிகச்சாதாரணமாக கட்டி இருப்போம். குறிப்பாக தியேட்டர் ஆர்டிஸ்ட் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நேரத்தில் நான், சூர்யா, கார்த்தி என பலரும் அவர்களுக்கு உதவி செய்தோம். அதேசமயம் முதுமை காலத்தில் இருக்கும் கலைஞர்கள், நாட்டுப்புற நடிகர்கள் என பலருக்கும் தேவையானதை எங்களால் முடிந்ததை செய்கிறோம் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read: அடடே!! கௌதம் மேனன் - சிம்பு படத்துல பிரபல ‘பாவக்கதைகள்’ பட நட்சத்திரமா?