அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர். இவர் தற்போது விஷால்,ஆர்யா நடிப்பில் எனிமி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் காதலர் தினத்தை முன்னிட்டு தமது தாய் எழுதிய கட்டுரை ஒன்றை தம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், அன்பால் இந்த உலகையே மாற்ற விரும்புவதாய் குறிப்பிட்டு தம் தாய் எழுதியதை பகிர்ந்துள்ளார். அந்த கட்டுரையில் ஆனந்த் ஷங்கரி தாயார் எழுதியிருப்பாவது:- “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது; எந்தவித எதிர்பார்ப்பும் நிபந்தனைகளோ இல்லாத தூய அன்பு. ஒரு காலத்தில் எனக்கு நாய்கள் என்றாலே அலர்ஜி. கிட்ட வரும்போதே பயத்தில் ஓடி விடுவேன். உயிர்களிடத்து அன்பு வேண்டும் படித்திருக்கிறேன். ஆனால் நான் என் குடும்பம், குழந்தைகள் நட்பு வட்டம் என்று மட்டுமே உழன்று கொண்டிருந்த எனக்கு மிருக பாசத்தை கற்று தந்தவன் என் மகன்.
ALSO READ: “Stars-அ வெச்சு தான் படம் பண்ணுவீங்களா?” - பாக்யராஜ் கேள்வி.. லோகேஷ் பதில்கள்.. வீடியோ!
என் தந்தையைப் போன்றே அவனும் எல்லா உயிர்களிடத்தும் பாசம் பொழிவான். பள்ளிக்காலத்தில் மதியம் காண்டீனில் ஏதேனும் வாங்கி சாப்பிட கொடுக்கும் பணத்தை மிச்சப்படுத்தி பள்ளிவாசலில் விற்கும் கலர் கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து விடுவான். அவன் வாங்கி வந்த மீன் தொட்டிகளும் கலர் மீன் குஞ்சுகளும் கணக்கிலடங்கா. ஆனந்த் மீன் வளர்த்தான், ஆடு வளர்த்தான், கோழி வளர்த்தான் என்று என் குடும்பத்தில் உறவினர்கள் அவனைக் கிண்டல் செய்வார்கள். ஒருமுறை வழிதவறி வீட்டுக்கு வந்துவிட்ட ஒரு குரங்கை நான் துரத்தி விட்டதற்காக என்னிடம் மிகுந்த கோபம் கொண்டான். நாமே அதை வளர்த்து இருக்கலாமே என்பது அவன் எண்ணம். நான் உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினால் போதாதா என்கிற என் மனக்குரல் அவனுக்கு கேட்டிருக்க நியாயமில்லை.
இப்போது வீட்டில் பால்கனியில் வரும் புறாக்களிடமும், ஓடும் அணில்களிடமும் காக்கைகளிடமும் எனக்கு பாசம் பொங்குவதற்கு அவன் வீட்டில் வளர்த்து வரும் இரண்டு நாய்க்குட்டிகளே காரணம். நான் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது, எங்கிருந்தோ பாய்ந்து என்னிடம் ஓடி வரும் அந்த இரு ஜீவன்கள் என்னை பாசத்தில் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன. இந்த உயிர்களின் நிபந்தனைகள் இல்லாத இந்த தூய அன்பை உணரச் செய்த என் மகனுக்கு கோடான கோடி நன்றி. எதிர்காலத்தில் மிருக மற்றும் பறவைகள் சரணாலயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது என் மகன் ஆனந்தின் கனவு. அந்த கனவு நனவாக... அதை நான் கண்டு களிக்க... ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்.”
இவ்வாறு இயக்குநரின் தாயார் எழுதியுள்ளார். பலரும் இதைப் படித்துவிட்டு நெகிழ்ந்துள்ளனர்.