சென்னை: விருமன் படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி ஆடியோ நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
நடிகர் சூர்யாவின் 2D Entertainment , நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி விருமன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைகிறார். நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’. இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.
முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார். விருமன் படம் 2022 சம்மர் காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை ஆடியோ உரிமையை உலகின் மிகப்பெரிய நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி (அறிமுகம்) பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.