தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் புது புது பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் நிகழ்ச்சி முழுக்க விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு மத்தியில், மாறி மாறி சில போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்ததும் சமீபத்திய எபிசோடுகளில் அதிகம் பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
மேலும் முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, குடும்பத்தை பிரிந்து வாடுவதால், அவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அதன்படி செயல்பட்டிருந்தார். அதே போல, சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.
அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. பொம்மை டாஸ்க்கிற்கு முன்பு வரை கூட சண்டை போட்டாலும் உடனடியாக ஒட்டி விடுவார்கள். ஆனால், இந்த டாஸ்க்கிற்கு பிறகு தொடர்ந்து சண்டை என வாரம் முழுக்க ஓயாமல் அரங்கேறி வருகிறது.
தற்போது நடந்து வரும் பொம்மை டாஸ்க்கில், போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும்.
இதில் ஷெரினாவின் காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனலட்சுமிக்காக ADK மற்றும் அசீம் ஆகியோரிடம் விக்ரமன் கேள்வி கேட்கும் வீடியோ, இன்னும் சலசலப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி உள்ளது.
அப்போது பேசும் விக்ரமன், "நீங்கள் அவ்வளவு பேசுகிறீர்கள். அந்த பொண்ணு உங்ககிட்ட வந்து நியாயம் பேசிட்டு இருக்குமா?" என கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் ADK, நீங்கள் கண்டிப்பது என்றால் அசீமை மட்டுமில்லாமல் அனைவரையும் கண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "நீங்க அறிவு இருக்கான்னு கேக்குறீங்க. உனக்கு என்ன Attitude, திமிரு இருக்கான்னு கேக்குறீங்க" என கேட்க, உடனடியாக அசீமும் அறிவு இருக்குறவங்க யாரும் தள்ள மாட்டாங்க என கொந்தளிக்கிறார்.
பின்னர் தனலட்சுமி தள்ளியது உங்களுக்கு தெரியுமா, அறிவு இருக்கா இல்லையான்னு எப்படி கேட்கலாம் என்றும் விக்ரமன் சொல்ல அங்கு அடுத்த நிமிடமே களேபரம் ஆகிறது. பொம்மை டாஸ்க் பெயரில் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் சண்டை மேல் சண்டை தான் நடந்து வருகிறது.
இதனால், வார இறுதியில் கமல் வரும் போது தான் இதற்கு ஒரு தீர்வு வரும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் காத்திருந்து வருகிறார்கள்.