ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களில் யார் இறுதி சுற்று வரை செல்வார்கள் என்பது பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில், மைனா விக்ரமன் இந்த பிக்பாஸ் போட்டியில் இறுதி சுற்றுக்குள் செல்வார் என்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,"விக்ரமனை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். முதல் சில வாரங்களில் அவரை பற்றி ஏதும் தெரியவில்லை. ஆனால், அதன்பிறகு போட்டிகளில் அவர் காட்டிய தீவிரமும், ஒரு நிகழ்வை அணுகும் விதமும் பிடித்திருந்தது. எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் கருத்து கூறுகிறார். தனிப்பட்ட முறையில் அது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் யாரையும் காயப்படுத்தவில்லை. ஆகவே, அவர் இறுதி சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்" என்றார்.
இதனையடுத்து, மைனாவிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார் விக்ரமன். அப்போது,"நான் இறுதி சுற்று வரையில் செல்வேன் என கூறியதற்கு நன்றி. ஆனால், என்னை கருத்துக்களை மட்டுமே கூறுபவர் என நீங்கள் கருதுகிறீர்கள். அப்படி இருக்க, எப்போதும் கருத்தை மட்டுமே சொல்பவரை எப்படி மக்கள் இறுதி சுற்று வரையில் செல்ல அனுமதிப்பார்கள்?" எனக் கேட்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் மைனா,"போட்டிகளில் அனைத்து விதமான டாஸ்க்களிலும் சிறப்பான முயற்சியை அளித்திருக்கிறீர்கள். 70 சதவீதம் கருத்து சொன்னாலும், 30 சதவீதம் சிறப்பாக போட்டியில் பங்கெடுத்துள்ளீர்கள்" என்கிறார். அப்போது விக்ரமன்,"அதைத்தான் நானும் கேட்கிறேன். 70 சதவீதம் கருத்து மட்டுமே சொல்றவர் போலியா இருப்பாரு. அவரை எப்படி மக்கள் தேர்ந்தெடுப்பாங்க?" என வினவுகிறார்.
இதற்கு பதில் அளிக்கும் மைனா,"மக்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பிடித்திருக்கலாம். அதுவே உங்களுக்கு ஒட்டு அளிக்க செய்திருக்கலாம்" என்கிறார். இதை விக்ரமன் ஆமோதிக்கிறார்.