நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் சமீபத்தில் மிக அசத்தலாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர். இதனையடுத்து, ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிய வண்ணம் இருக்க, பல விறுவிறுப்பான சம்பவங்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறி இருந்தது.
அப்படி இருக்கையில், மொத்தம் 21 போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் ஃபினாலே சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியதையடுத்து, யார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்பதை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களையும் குறிப்பிட்டு வந்தனர். இதில் ஷிவின் மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேற, அசிம் டைட்டில் வின்னராகவும் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மறுபக்கம் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன், இரண்டாவது இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக வலம்வந்து நல்ல புகழையும் பெற்ற விக்ரமன், வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர், மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கும் பிரத்யேக பேட்டி ஒன்றை விக்ரமன் அளித்துள்ளார். இதில் தன்னுடன் ஆடிய சக போட்டியாளர்கள் குறித்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனக்கு கிடைத்த மக்களின் ஆதரவு குறித்தும் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு, கமல்ஹாசன் அவரது கையை உயர்த்திய சமயத்தில், விக்ரமன் முகத்தில் ரியாக்ஷன் இல்லை என்றும், வெளியே ஏதும் காட்டிக்கொள்ள வேண்டாம் என உங்களுக்குள்ளே நீங்கள் அடக்கிக் கொண்டு எந்த ரியாக்ஷனை வெளிப்படுத்தவில்லையா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த விக்ரமன், "என் கைய தூக்கி இருந்தாலும் நான் அவ்வளவுதான் ரியாக்ட் பண்ணி இருப்பேன். அவ்வளவுதான் சிரிச்சி இருப்பேன். நான் எப்படி இருக்கேனோ அப்படித் தானேங்க இருக்க முடியும். அது புடிச்சிருந்தா புடிக்கும், பிடிக்கலன்னா புடிக்கல தான். அதுக்காக நம்மளை மாத்திக்க முடியாது. அசிம் கைய தூக்குனாங்க உண்மைதான் ஆனால் அதுக்கான விஷயத்த அங்கேயே சொல்லிட்டேன்" என தெரிவித்தார்.
மேலும் அசிமை பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவித்த பிறகு, கோப்பையை கொடுத்து விட்டு கமல்ஹாசன் விக்ரமன் அருகே வந்து நின்றது குறித்து ஏராளமான மீம்ஸ் பகிரப்பட்டதாகவும், விக்ரம் தான் டைட்டில் வின்னராக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு தான் கமல்ஹாசன் அப்படி நின்றார் என்றும், கமல் இறுதியில் அறமே வெல்லும் என கூறியதற்கும் அதுதான் காரணம் என்றும் பரவலாக ஒரு கருத்து பரவி வந்தது.
இது குறித்து தனது விளக்கத்தை கொடுத்த விக்ரமன், "அவர் அறத்தின் பக்கம் நின்றார். இறுதி மேடையிலும் அறத்தின் பக்கம் தான் நின்றார். அறமே வெல்லும் என்று சொல்லிட்டு அவர் அறத்தின் பக்கம் நின்றார். அவருடைய Limitations-அ வந்து நம்ம மதிக்கணும்" என பதில் கொடுத்துள்ளார்.