நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் சமீபத்தில் மிக அசத்தலாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர். இறுதியில் அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் Finale வரை முன்னேறி இருந்தனர் . இறுதியில், அசிம் வெற்றி பெற்றதாக அவரது கையை உயர்த்தி கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும் விக்ரமன் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தனர்.
106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக வலம்வந்து நல்ல புகழையும் பெற்ற விக்ரமன், வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர், மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கும் பிரத்யேக பேட்டி ஒன்றை விக்ரமன் அளித்துள்ளார். இதில் தன்னுடன் ஆடிய சக போட்டியாளர்கள் குறித்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனக்கு கிடைத்த மக்களின் ஆதரவு குறித்தும் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோருக்கு இடையே நடந்த வாக்குவாதங்கள் குறித்து பேசும் போது, கமல்ஹாசன் விக்ரமன் பக்கம் தான் நின்றார் என்றும் ஒரு கருத்து பரவலாக இருந்து வந்ததை நெறியாளர் குறிப்பிட்டு, உள்ளே இருந்து பார்க்கும் போது இது எப்படி தோன்றியது என்றும் நியாயமாக இருந்ததா என்றும் கேள்வி ஒன்றை விக்ரமனிடம் எழுப்பி இருந்தார்.
இதற்கு விளக்கமளித்த விக்ரமன், "கமல் அண்ணா ஒரு பக்கம் நின்னாருன்னு நான் நம்புறேன். அது என்னால உணர முடிஞ்சது. கடைசியா அவர் வந்து என் கையில ஒரு கடிதம் கொடுத்துட்டு போனாருல்ல, அந்த தருணம் வரை கூட நான் துதியாக நம்பினேன், இப்போது கூட நம்புறேன். அவர் யார் பக்கம் நின்றுருக்கார் தெரியுமா, அறத்தின் பக்கம். உண்மையை சொல்றேன் அவர் மட்டும் அந்த பக்கம் நிக்காம இருந்திருந்தா என்ன, நான் இரண்டாவது வாரமே வெளியே போறேன்னு வந்து இருப்பேன். ஏன்னா அந்த வீட்டுக்குள்ள எனக்கு ஒரு உத்வேகம் எப்ப கிடைக்கும்னா நான் பேசுற விஷயங்கள் சரின்னு சொல்லும் போது தான்.
அறம் வந்து எப்பவுமே ஏற்கப்படணும். இது ஒரு வணிக நிகழ்ச்சி, இதனுடைய கட்டுப்பாடுகள், இது எல்லாம் மீறி ஒரு Anchor, Host ங்குற விஷயத்தை மீறி, அந்த அறத்துக்காக அவர் நிற்கவில்லை என்றால் இரண்டாவது வாரம் நானே வெளியே போயிருப்பேன். அவருடைய எபிசோடுலயே நான் வெளியே போறேன்னு சொல்லிட்டு நான் போயிருப்பேன். ஆனால் அந்த மனிதர் உயர்ந்து நின்றார். அறத்தின் பக்கம் நின்றார். அதான் என்னால 15 வாரம் அறத்தை கையில் கொண்டு அங்கே இருக்க முடிந்தது. இந்த தருணத்தை நான் ஒரு மொமெண்டாக எடுத்துவிட்டு அவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என விக்ரமன் குறிப்பிட்டுள்ளார்.