2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.
Neo Noir வகைமையில் உருவான இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார். Noir வகைமைக்கு ஏற்றாற் போல் மோனோ க்ரோம் டோனில் படத்தின் ஒளிப்பதிவு அமைந்திருந்தது.
'இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (15.10.2021) துபாயில் தொடங்கியுள்ளது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து,அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், வேதா விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.