சென்னை: 'விக்ரம்' நடிக்கும் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் டிவிட் வைரலாகி உள்ளது.
புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டுக்கு போகிறாரா தேவி ஸ்ரீ பிரசாத்?
சியான் விக்ரம். கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.
கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே (ஜனவரி -5,2022) படமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிவிட்டரில் படப்பிடிப்பு முடிந்த அப்டேட்டை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டு இருந்தார். அதில் தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட தவறிவிட்டதாக சில ரசிகர்கள் பின்னூட்டம் செய்தனர். அந்த ரசிகர்களில் ஒருவரின் பின்னூட்டத்தில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா டிவீட் செய்தார். அதில், "போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு அதை தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன்" என கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து, "உரிய மரியாதையுடன் சார்!! நான் எப்போது, எங்கு கேட்டாலும், கோப்ரா படத்தின் பட்ஜெட் அதிகமானதற்கு நான் காரணம் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்!! வதந்திகளை விட ஆதாரங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் பேசும் !! மேலும் "Cobra Team" என்றால் அது என் தயாரிப்பாளரையும் உள்ளடக்கியது தான். நான் அவரை எப்போதும் கைவிடுவதில்லை! சியர்ஸ் சார்" என பதில் டிவீட் செய்து இருந்தார்.
இந்த டிவீட்டுக்கு பதில் அளித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவா, "உங்கள் பதிலுக்கு நன்றி அஜய். வதந்திகள் எதுவாக இருந்தாலும் அதை விவாதித்து தீர்வு காணலாம். நீங்கள் சியான் விக்ரமுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளதால் தயாரிப்பாளரின் பெயரையும் குறிப்பிட வேண்டும். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன், ஏற்றுக்கொண்டு செய்யுங்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்" என கூறினார்.
இந்த டிவீட்டுக்கு பதில் அளித்த இயக்குனர் அஜய், "இது வேண்டுமென்றே செய்யவில்லை சார்!! நான் எப்போதும் எனது தயாரிப்பையும் தயாரிப்பாளரையும் உயர்வாக கருதுகிறேன்.. எப்போதும்!!" என கூறினார்.
ET படத்தின் டீசர்! புது போஸ்டரில் சன்பிக்சர்ஸ் கொடுத்த அப்டேட்!