நடிகர் சீயான் விக்ரம், ஐக்கிய அமீரக அரசு மூலம் மிகப் பெரிய கௌரவத்தை பெற்றுள்ளார்.
Also Read | THUNIVU: "துணிவு படத்தில் வில்லனா?".. ரசிகருக்கு பதில் அளித்த பிரபல நடிகர்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருந்த 'கோப்ரா' திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியானது.
கோப்ரா படத்தினை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இந்த பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படம் 18 ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீயான் விக்ரமுக்கு ஐக்கிய அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி உள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை பூர்ணாவின் கணவரான தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலியின் JBS நிறுவனத்தின் மூலம் இந்த கோல்டன் விசா சீயான் விக்ரமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களை கௌரவிக்கும் வகையில் ஐக்கிய அமீரக அரசால் கொண்டுவரப்பட்டது தான் கோல்டன் விசா.
இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள் பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றன. பத்து வருடங்கள் வரை ஐக்கிய அமீரகத்தில் தங்கும் வசதி கொண்ட சிறப்புமிக்க விசா தான் இந்த கோல்டன் விசா.
இதை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களும் அமீரக நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள். இந்த கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது.
Also Read | "இப்பதான் பாத்தேன்".. 'ரஞ்சிதமே' முழு வீடியோ பார்த்துட்டு தமன் போட்ட ட்வீட்!