கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இன்னும் திரைப்படம் வெளியாக, இரண்டரை வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் காரணமாக உச்சகட்ட ஆவலில் படத்தினை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பிரபலங்கள் சிலர், தங்களின் ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றி படத்திற்கு ஏற்ப புதிதாக அப்டேட் செய்துள்ளனர். அந்த வகையில், நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், தற்போது ட்விட்டரிலும் அதே பெயரை மாற்றி வைத்துள்ளார்.
இன்னொரு பக்கம், குந்தவை கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷாவும் அதே பெயரை தனது ட்விட்டரில் தற்போது அப்டேட் செய்துள்ளார். இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.