கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 50 நாட்களாக மொத்த இந்தியாவும் முடங்கி போயுள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கடைகள் திறக்கப்பட்டு, லேசான சகஜநிலை திரும்பி வருகிறது. இதில் மக்கள் பெரிதாக மிஸ் செய்த ஒரு விஷயம்தான் திரையரங்கங்கள். வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்த ஒரு சமூகத்திற்கு, இது ஒரு இழப்புதான். இந்த நேரத்தில் தியேட்டர்களை மிஸ் செய்யும் நமது ஏக்கத்திற்கு ஒரு சிறிய மருந்தாக, பிரபலங்களின் திரையரங்க நினைவுகளை Matinee Memories என எழுதி வருகிறோம். அதில் இப்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து கலக்கியுள்ள ஷாந்தனு பாக்யராஜ் தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
சிறுவயது முதலே திரைத்துறையின் பின்புலத்தில் வளர்ந்து, பல கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது தனக்கான ஒரு முக்கியமான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ள ஷாந்தனுவிடம், திரையரங்கம் பற்றி என்றதுமே செம குஷி ஆகிவிட்டார். அப்போது அவர் கூறியதாவது, ''எனக்கு தியேட்டர்ன்னு சொன்னாலே, அந்த விசில் சத்தம், கைதட்டல், ஆர்ப்பாட்டம் தான் நினைவுக்கு வருது. குறிப்பா ரஜினி, கமல், விஜய், அஜித்ன்னு உச்ச நட்சத்திரங்களின் படங்களை தியேட்டர்ல பார்க்குறதுன்றதே வேற லெவல் ஃபீல். பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் அமர்ந்து, நம்மளை மறந்து கைதட்டி, விசிலடிச்சு பார்க்குற அந்த அனுபவம்தான், என்னோட தியேட்டர் மெமரீஸ்ல சிறந்ததுன்னு நினைக்கிறேன். அதிலும் ஆல்பர்ட் தியேட்டர்ல தளபதியோட வேட்டைக்காரன் படத்தை பார்த்ததை என்னால வாழ்க்கையில மறக்கவே முடியாது. ரசிகர்களோட செம ரெஸ்பான்ஸ்க்கு மத்தியில அந்த படத்தை ரொம்பவே என்ஜாய் பண்ணி பார்த்தேன். அப்படி ஒரு ஃபீலை எனக்கு கொடுத்த படங்கள்ன்னா, அது தல நடித்த விஸ்வாசம், அப்புறம் தளபதியின் மெர்சல். இந்த ரெண்டு படத்தையும் மொத்த தியேட்டரும் கொண்டாடி பார்த்துச்சு. இன்னும் அந்த நினைவு எனக்குள்ள இருக்கு'' என தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டவர், தியேட்டர்களின் முக்கியத்துவம் குறித்தும் பேச தவறவில்லை.
இன்னைக்கு ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்ஸ் வந்துருச்சு. ஒரு படத்தை நாம வீட்டுல இருந்தே பார்க்கலாம். ஆனால் அந்த தியேட்டர் அனுபவமே வேறதான். வீட்டுல பார்க்கும் போது நமக்கு நிறைய கவனச் சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கு. ஆனா, தியேட்டர்ல பார்க்கும் போது, அப்படியான எந்த சிதறலும் இல்லாமல், அந்த படத்தோட முழுசா கனக்ட் ஆகி பார்க்க முடியும். அதுவும் பெரிய நட்சத்திரங்களோட படங்களை அந்த அட்மாஸ்பியர்ல பார்க்குறதுதான், சிறப்பான தரமான அனுபவமா இருக்கும்' என துள்ளல் குறையாமல் பேசி முடித்தார் ஷாந்தனு.
தியேட்டரில் ஆர்ப்பாட்டமாக படம் பார்த்த ஷாந்தனு, தளபதியுடன் கலக்கிய மாஸ்டர் சீக்கிரமே திரைக்கு வரதான் போகிறது. அன்று ஷாந்தனு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும், அவரை போல கைதட்டல், விசில் சத்தம் என அந்த பேரனுபவத்தை கொண்டாடப் போகிறார்கள். அந்த நாள் வரும் வரை, நமது திரையரங்க நினைவுகளுடன் நாமும் காத்திருப்போம்.!