நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமம் குறித்து அதிகாரபூர்வ தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில், விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, VTV கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து, 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் ஆகியோர், தங்களது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். தமிழில் 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் 'வாராசுடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷாம், யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
வாரிசு படத்திற்கு எஸ் தமன் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் பழனி கவனிக்க, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் இணைந்து கதை எழுதி உள்ளனர். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாரிசு படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ளது.
பொங்கல் ஸ்பெஷலாக வாரிசு ரிலீஸ் ஆக உள்ளதையடுத்து, படத்தின் சிங்கிள் பாடல் உள்ளிட்ட அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.