விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கூட்டுக்குடும்பப் பாசம், அண்ணன் தம்பி உறவு உள்ளிட்டவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமீபத்திய காட்சிகளாக இந்த சீரியலில் வரும் லட்சுமி என்ற கேரக்டர் திடீரென இறந்து போவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக, இந்த சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் கடைசி சகோதரராக வரும் கண்ணன், ஐஸ்வர்யாவை யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, இந்த சீரியலின் மற்ற கேரக்டர்கள் அதிருப்தி அடைந்து கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றினர்.
இந்த சோகம் தாங்க முடியாமல், உடல் நிலை சரியில்லாமல் இருந்த லட்சுமி அம்மா கண்ணனை நினைத்து வருந்தினார். அதன் காரணமாக இறந்து விட்டதாக கதையில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து லட்சுமி அம்மாவின் மரணத்தை ஒட்டி, கண்ணன் கடைசிநேரத்தில் வருவாரா வரமாட்டாரா என்கிற பரபரப்பு அனைவருக்குமே தொற்றிக்கொண்டது. கடைசி நேரத்தில் கண்ணன் வந்து அழுது புரண்ட உருக்கமான காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும் இந்த காட்சிகளை அடுத்து, கண்ணன் மொட்டை அடித்துக் கொள்ளும் காட்சியும் அரங்கேறியது. ஒரு சீரியலுக்காக ஒரு நடிகர் இவ்வளவு அர்ப்பணிப்பாக இருப்பதை எண்ணி பலரும் அவரை பாராட்டி வந்தனர்.
இதனிடையே கண்ணனின் மனைவியான ஐஸ்வர்யா கேரக்டர் பல சூழ்நிலைகளில் மாற்றம் செய்யப்பட்டு கொண்டே வந்ததை அடுத்து கடைசியில் விஜே தீபிகா நடித்துக் கொண்டிருந்தபோது, அவரும் மாற்றப்பட்டு தற்போது அந்த கேரக்டரில் சாய் காயத்ரி நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் லட்சுமி அம்மாவின் மரணத்தை அடுத்து அவருக்கு இறுதிச்சடங்கு நடப்பது போன்ற காட்சிகள் சீரியலில் அரங்கேறின.
இந்த காட்சிகள் மிகவும் உருக்கமாக எடுக்கப்பட்டதாகவும், அவற்றை மறக்கவே முடியாது என்றும் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் லட்சுமி கேரக்டரில் நடித்த ஷீலா மற்றும் கண்ணன் கேரக்டரில் நடித்த சரவணன் இருவரும் பேட்டி கொடுத்திருந்தனர்.
இதனிடையே லட்சுமி கேரக்டரில் நடித்த ஷீலா பற்றிய தகவல்களும் சமூக வலைதளத்தில் பரவின. உண்மையில் ஷீலா, நடிகர் விக்ராந்தின் தாய் என்பதும், நடிகர் விஜய்யின் உறவினர் என்பதும் தெரியவந்தது.
விக்ராந்தின் திருமண தொகுப்பு படங்களில் ஷீலா மற்றும் விஜய் குடும்பத்தினர் இருப்பதையும் காண முடிந்தது.
இந்த நிலையில்தான் லட்சுமி கேரக்டர் உயிரிழக்கும் இந்த காட்சிகளை நடித்து முடித்த பிறகு ஷீலாவுக்கு இந்த படக்குழுவினர் சில சடங்கு மற்றும் பரிகாரங்களை செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
அதன்படி இறப்பு காட்சிகளில் நடித்த ஷீலாவுக்கு, இந்த காட்சிகளில் நடித்து முடித்து செல்வதற்கு முன்பாக சுற்றிப் போடுதல் உள்ளிட்ட சில சடங்குகள் பின்பற்றப்பட்டுள்ளன. சினிமாவில் இத்தகைய சென்டிமெண்ட்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது.
அத்துடன் இந்த காட்சிகளில் சில நேரங்களில், ஷீலா நடிப்பது போல், சில நேரங்களில் ஷீலாவுக்கு பதிலாக, பாடையில், பொம்மை ஒன்று அளவெடுத்து செய்யப்பட்டு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பொம்மை தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
தற்போது லட்சுமி கேரக்டரில் நடித்து வந்த ஷீலா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து உயிரிழந்திருப்பதாக காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதை அடுத்து, இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
இதேபோல் இந்த சீரியலில் கண்ணனின் நடிப்பும் மற்ற நடிகர்களின் நடிப்பும் மிகவும் அழுத்தமாக இருந்ததாகவும் பலரும் பேசி வருகின்றனர். இதனால் கடந்த ஓரிரு வாரங்களாக இந்த சீரியல் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.