தொலைக்காட்சி பிரபலமும், விஜய் டிவி சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் நடிகையுமான சித்ரா காமராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

சினிமா துறையில் உள்ள அவரது நண்பர்களையும் ரசிகர்களையும் இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டும் அல்லாது வேறு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர் சித்ரா. அவரது கலகலப்பான பேச்சும் உணர்வுப்பூர்வமான நடிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது!
சென்னைக்கு அருகே உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில், தூக்கிட்ட நிலையில் இன்று அதிகாலை காணப்பட்டார், சித்ரா. போலீசார் விசாரணையைத் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு தொழிலதிபருடன் அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று இன்று அவர் காலமான செய்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சேர்ந்தவர்களுக்கோ தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக உதவியை நாட தயங்க வேண்டாம் - மாநில சுகாதாரத் துறை தற்கொலை உதவி எண் - 104; சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050.