பிக்பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருப்பவர் மாடல் ஸ்ருதி. முன்னதாக கருமை நிறத்தில் கடவுள்களின் ஃபோட்டோஷூட் வாய்ப்பு கிடைத்ததால், இணையத்தில் பிரபலமானதாகக் கூறியிருந்தார் ஸ்ருதி.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கதை சொல்லும் டாஸ்கில் அவர் தன் வாழ்க்கைப் பயணத்தை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசும்போது “என்னுடைய அப்பாவின் முதல் மனைவி இறந்து விட்டார். என்னுடைய அம்மா, என் அப்பாவுக்கு இரண்டாம் தாரம். என்னுடைய அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் ஒரே வயது.
தாத்தா குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தபோது அப்பா உதவி செய்ததால் அம்மாவை என் அப்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என் அம்மா, என் அப்பாவை திருமணம் செய்துகொண்டு வந்தபோது, அப்பாவிற்கு ஏற்கனவே ஐந்து பிள்ளைகள் இருந்தனர். அதில் நான்கு பேர் அம்மாவை விட வயதில் மூத்தவர்கள்.
அம்மாவிற்கு திருமணம் ஆகும் போது அவருக்கு 18 வயது. என் அம்மா கர்ப்பமாக இருந்த போது என்னுடைய அப்பா தனக்கு ஏற்கனவே ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர், உனக்கு வேண்டுமானால் பிள்ளை பெற்றுக் கொள் என கூறிவிட்டார். அதன் பிறகு நான் பிறந்தேன். அப்பாவிற்கு பெண் பிள்ளைகளை பிடிக்கும். ஆனாலும் என்னை ஒரு வேண்டாத பிள்ளையாகவே அவர் கருதினார்.
நான் என் அப்பாவை அப்பா என்று ஒரு முறை கூட அழைத்ததே இல்லை. நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, ஒருநாள் பள்ளி விட்டதும் மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்தபோது எல்லோரும் வீட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள். என்னவென்று நான் கேட்டபோது, எனது தந்தை இறந்து விட்டதாக கூறினர். அப்போது நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். அதன் பிறகும் வாழ்க்கை மிகவும் கஷ்டமான நிலையிலேயே சென்றது.
பின்னர் நன்றாக படித்து வேலைக்கு சென்று அம்மாவை காப்பாற்ற வேண்டுமென்று இருந்தபோது, அம்மாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால், இனி நாம் பொருளாதார ரீதியாகவும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மிகவும் நன்றாக படித்து கல்லூரி படிப்பை முடித்த போது, கையில் 6 அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்கள் இருந்தன.
அப்போது ஒரு கம்பெனியை தேர்வு செய்து அங்கு வேலைக்கு சேர்ந்தேன். அங்கு இரண்டு வருடம் பணிபுரிந்த பின்பு, சரியான பணி ரீதியான வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து வேறு வேலைகளுக்கு முயற்சித்தேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. அதன்பின்பு மாடலிங்கில் இறங்கி, தற்போது அதில் கோலோச்சி நிற்கிறேன்” என்று, இப்படி பல தடைகளை தாண்டி இந்த இடத்தில் இருப்பதாக ஸ்ருதி மிக உருக்கமாக பேசினார்.