பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. சீரியல் தொடக்கம் முதலிலேயே கதைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. கேரக்டர்கள் என்ட்ரி அனைத்துமே தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
இதில் கதைப்படி ஊரில் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாரதி அப்பாவின் பிசினஸை கவனித்துக் கொள்ளாமல் ஊதாரியாக சுற்றி வருகிறார். குடி குடிப்பது, ஊர் சுற்றுவது என பொறுப்பின்றி பாரதி சுற்றிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அவருக்கு ஒரு திருமணம் பண்ணி வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவருடைய அம்மா சௌந்தர்யா நம்புகிறார். இதனிடையே சௌந்தர்யாவின் அண்ணியும் பாரதியின் அத்தையுமான ஷர்மிளா தன்மகள் வெண்பாவை பாரதிக்கு கட்டி வைப்பதில் தீர்மானமாக இருக்கிறார். ஆனால் பாரதிக்கு மேட்ரிமோனியில் பெண் பார்க்க முயற்சிக்கிறார் சௌந்தர்யா.
இப்படி இந்த கதை போக, ஜெயிலில் சித்ரா என்கிற பெயரில் வினுஷா ( முதல் சீசன் கண்ணம்மா) அறிமுகமாகிறார். ஜெயிலிலிருந்து அன்று ரிலீஸ் ஆகும் அவர் வெளியே வரும் பொழுது ஜெயிலுக்குள் சித்ராவை சந்திக்கும் தனம் என்கிற கேரக்டர், தான் ஜெயிலுக்குள் கஞ்சா விற்றதை சித்ரா காட்டி கொடுத்து விட்டதால் அவரை பழிவாங்கத் துடிக்கிறார். சித்ரா வெளியேறிய பின் அவரை கொல்வதற்கு ஆட்களை அனுப்பி விடும் திட்டத்தை சித்ராவிடமே நேராக தனம் தெரிவித்து பயமுறுத்துகிறார். ஆனால் ஜெயிலில் இருந்து வெளியேறிய பின் தன் தாய் மாமன் வீட்டுக்கு சித்ரா செல்ல அங்கு அவரை சேர்த்துக் கொள்ளாமல் விரட்டி விடுகின்றனர்.
இந்த நிலையில் நடப்பது தான் ட்விஸ்ட். ஆம், சித்ரா தன்னுடைய அத்தை மாமா தன்னை சேர்த்துக் கொள்ளாததால் எங்கே செல்வது என தெரியாமல் இருக்க, அப்போது ஜெயிலில் இருக்கும் தனம் என்கிற பெண்மணி அனுப்பிய ஆட்கள் சித்ராவை துரத்தி வர, சித்ரா ஒரு பேருந்தில் ஓடிச் சென்று ஏற, அங்கு ஒரு கை கை கொடுத்து உதவுகிறது. அந்த கை கொடுக்கும் கை வேறு யாரும் அல்ல. அவர்தான் இந்த சீரியலில் ரியல் கண்ணம்மா. இந்த கேரக்டரில் ரேஷ்மா நடித்திருக்கிறார்.
இதன் பிறகு கண்ணம்மா சித்ராவிடம் தன் கதையைச் சொல்கிறார். அதன்படி சிறுவயதில் பாரதியின் நண்பனை கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடியதாக ஒரு குட்டி கதையை சொல்கிறார். இதனால் மீண்டும் தன்னை தன் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருகிறார். இதனுடையே பேருந்து ஓரிடத்தில் நிற்க சித்ராவை கொலை செய்ய வந்தவர்கள் இருவரில் யார் சித்ரா என்று தெரியாமல் உண்மையான கண்ணம்மாவை கொலை செய்துவிடுகின்றனர். இந்த குற்ற உணர்ச்சியினால் கண்ணம்மாவின் பெயரில் சித்ரா கண்ணம்மாவின் வீட்டுக்கு செல்கிறார்.
அங்கு பாரதியை ஒரு சிக்கலான சூழலில் சித்ரா சந்திக்கிறார். பாரதியின் அடாவடி நடவடிக்கைகள், கண்ணம்மாவாக சித்ரா சென்று இருக்கும் ஆள்மாறாட்ட சிக்கல் இவை அனைத்தையும் கடந்து எப்படி பாரதி கண்ணம்மா இணைவார்கள் என்பதை நோக்கி இந்த கதை செல்வதாக தெரிகிறது.