லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர்.
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஹிட் அடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படங்கள் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.
அந்த நேரத்தில்தான் தளபதி 65 திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தளபதி 65 படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் தலைப்பு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. பீஸ்ட் என பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தளபதி66 திரைப்படம் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கின. அதன்படி கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் தோழா திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி தளபதி 60வது படத்தை இயக்குவார் என்று பேசப்பட்டு வந்தது. பிரபல தெலுங்கு இயக்குனரான இவர், தமிழில் தோழா திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு நேரடியாக விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்தப் பேச்சுகள் பேச்சளவில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் தளபதி66 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
அதன்படி வம்சி பைடிபல்லி தளபதி66, திரைப்படத்தை இயக்குவார் என்றும் முக்கிய நடிகர்கள் மற்றும் தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்ட, இந்த படக்குழுவினரின் முழு விபரமும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பின் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், விஜய் நடிக்கும் முதல் தமிழ் படம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, சிரிஷ் மற்றும் இந்த படத்தின் இயக்குனர் வம்சி பைடிபல்லி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனம் பெற்று வரக்கூடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தளபதி66 படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்ட உடனேயே, இயக்குநர் வம்சி பைடிபல்லி மற்றும் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, சிரிஷ் உள்ளிட்டோர் திருமலைக்கு விசிட் அடித்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.