தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.
1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.
பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது.
விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர், விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. நாளை விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த Farzi வெப் சீரிஸ், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பில் குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு 'மகாராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, மதுரை திருப்பாலையில் நடைபெற்ற "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற தலைப்பில் நடந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். கடைசி நாளான இன்று அமைச்சர் மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் ஆகியோருடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி பார்வையிட்டார். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, "முதல்வர் ஸ்டாலின் மீது ஏற்கனவே மரியாதை இருந்தது. முதல் முறையாக இளைஞரணி தொடங்கப்பட்டது திமுகவில் தான் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் அது குறித்து எனக்கு தெரியாது. வாரிசு அரசியல் மூலம் தான் ஸ்டாலின் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்ற கூற்று இந்த கண்காட்சி புகைப்படங்கள் வரலாறு மூலம் பொய்யாகி உள்ளது. இந்த அரசு குறித்த கருத்துக்களை நான் அரசியலுக்கு வரும் போது சொல்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை." என விஜய் சேதுபதி பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.