விஜய் சேதுபதி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங்கில் இருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

நானும் ரவுடிதான் கூட்டணி….
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டானிக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
மாடர்ன் முக்கோணக் காதல் கதை….
இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர்.
டப்பிங்கில் விஜய் சேதுபதி…
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் அறையில் இருக்கும் விஜய் சேதுபதி ‘கண்மணி அன்போடு காதீஜா எழுதும் கடிதமே…’ என ஜாலியாக பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன் ‘டப்பிங் என்ன நடக்கிறது பாருங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இத விட சிறந்த combo….
முன்னதாக இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘இதை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றி. அசாத்திய திறமையாளர்களோடு பணிபுரிந்துள்ளேன். அனைவரும் இந்த படத்தை மிகச் சிறப்பாக எடுத்து வந்துள்ளனர். இவர்களை ஒன்றினைத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நீண்ட நாட்களுக்கு என் மனதில் இருக்கும். அனைவருக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.