நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் டீசர் தற்போது வெளியாகி கவன ஈர்ப்பை பெற்று வருகிறது.

இயக்குநர் சீனு ராமசாமியை, விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லலாம். விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள மாமனிதன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது YSR FILMS PVT LTD-ன் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த டீசரின்படி, ஆட்டோ டிரைவராக தன் மனைவி, குழந்தைகளுடன் அமைதியாக வாழும் விஜய் சேதுபதி, மெல்ல மெல்ல வெள்ளை சட்டை அணிந்து மதிப்பு மிகு மனிதராக மாறுகிறார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆட்டத்தை பார்க்க சொல்லியும் அமைதியாக கவனிக்க சொல்லியும் வசனம் பேசும் விஜய் சேதுபதி, இறுதி காட்சிகளில் இன்னும் ஊகிக்க முடியாத பரிமாணத்துக்கு செல்கிறார்.
எதிர்பார்ப்பை உருவாக்கும் இந்த மாமனிதன் டீசரை அடுத்து திரைப்படத்தை காண நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் சீனு ராமசாமியின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.