சென்னை, 23, பிப்ரவரி, 2022: இயக்குநர் எம்.மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் கடைசி விவசாயி.
கடைசி விவசாயி
இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி என்கிற முதியவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இந்த முதியவருடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்டு ஹார்வி இசையமைத்துள்ளனர்.
குவியும் பாராட்டுகள்
கொரோனாவால் இப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த பிப்வரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. படத்தை பார்த்த அனைவருமே கலங்கியும் உருகியும் படத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கடைசி விவசாயி பட இயக்குநர் எம்.மணிகண்டனை அவரது ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்த மிஷ்கின், மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த மணிகண்டனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தினார்.
மிஷ்கின் மலரஞ்சலி
இது குறித்த தமது பதிவில் இயக்குநர் மிஷ்கின், “படத்தில் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன்.
மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் நல்லாண்டி
ஆம், இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான மாயாண்டி கதாப்பாத்திரத்தில் நல்லாண்டி எனும் நிஜ விவசாயி தம் எதார்த்தமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தன் வாழ்க்கைக்கு நெருக்கமான கதையே படத்தில் இருந்ததால், கதையுடன் ஒன்றிய நல்லாண்டி, படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.
ஆனால், நல்லாண்டி படம் வெளியாகும் முன்பே உயிரிழந்துவிட்டதால், படம் பார்க்க உயிருடன் இல்லை என்பது குறித்து அவரது குடும்பத்தினரும் ஏனைய படக்குழுவினர் வருந்தி கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர்.