தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கான நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற தனி நீதியரசர் எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என தீர்ப்பில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதோடு, விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டத்தொகை விதித்த நீதியரசர் எஸ். எம் சுப்ரமணியம், அதை தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில், மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தண்டத்தொகை ரத்து செய்ய வேண்டும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நீக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதியரசர்கள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் தண்டத்தொகை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். நுழைவு வரியை வசூலிக்க வணிக வரித்துறைக்கு கச்சாத்து பிறப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (28.07.2021) மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தண்டத்தொகை 1 லட்ச ரூபாய் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து நீதியரசர், 1 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசிடம் ஏன் வழங்ககூடாது என பதில் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் தரப்பில் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டது என்றும், தண்டமாக விதிக்கப்பட்ட தொகை ஒரு இலட்சத்தை கொரோனா நிவாரண தொகையாக முதலமைச்சர் நிவாரன நிதிக்கு தற்போது வழங்க விருப்பமில்லை என்றும் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.