சொகுசு கார்களுக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மீது நுழைவு வரியைக் கோருவதில் இருந்தும், வரி வசூலிப்பதை அதிகாரிகள் தடை செய்யுமாறும் நடிகர் விஜய் கோரியிருந்தார். இதை குறிப்பிட்டு தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், இவ்வாறு கோரியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் ‘வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு’ எனக்கூறி விஜய்க்கு இந்த அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
நடிகர் விஜய் 2011-12 ஆம் ஆண்டில் இந்த காரை வாங்கியதாகக் கூறப்படும் நிலையில் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் “திரைப்பட ஹீரோக்கள் ஆட்சியாளர்களாக உயர்ந்துள்ளனர். மேலும் இந்த நட்சத்திரங்கள் உண்மையான ஹீரோக்கள் என்றே மக்கள் கருதுகின்றனர். எனவே அவர்கள் ரீல் ஹீரோக்களைப் போல நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறார்கள். வரி ஏய்ப்பு என்பது தேச விரோத பழக்கமாகக் கருதப்பட வேண்டும். ஆகவே வரிவிலக்குக் கோரும் அணுகுமுறை மற்றும் மனநிலை மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.