நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்கிற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ. இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர்.
விஜய்க்கு முன்பும் பின்பும் பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் மணவாழ்க்கை, திரை வாழ்க்கை பல விஷயங்களை பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவியும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் ஆகியோரிடம் விஜே அர்ச்சனா நிறைய சுவாரஸ்யமான கேள்விகளை கேட்க, அவர்களும் தங்களது நினைவலைகளை பகிர்ந்துகொண்டனர்.
இதில் தன் மகளின் மறைவு நாளில் நடந்தவற்றை குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “அவள் பெயர் வித்யா. அவளுக்கு அந்த வியாதி இருக்கு என்று தெரிந்த பிறகு எந்த சூட்டிங் போனாலும் நான் அழைத்துச் சென்று விடுவேன். எல்லோருடனும் நன்றாக பழகுவாள். குறிப்பாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறையிலேயே தான் இருப்பாள். அங்கிள் அங்கிள் என்று அவரை அழைத்துக் கொண்டு இருப்பாள்.
அவள் இறந்த நாள் எங்களால் மறக்க முடியாது. அப்போது சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் எனது Balidaan பட ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. ஜிதேந்திரா, ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர். காலையில் ஷூட்டிங். சாப்பிட்டு ஷூட்டிங் கிளம்பும் முன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘போகாதீங்க அப்பா’ என்று சொன்னாள்.
அப்போது அவளை பிடித்து தூக்கினேன், அதற்குள் அவளுக்கு சிறிது நேரத்தில் வாயிலிருந்து ரத்தம் வர, கோயில் உட்பட பல இடங்களுக்கு தூக்கிக்கொண்டு அலைந்தோம். என் மடியில் மறைந்தாள்.
அவள் தன் கண்களை மூடியவுடன் விஜய், ‘அப்பா’ என்றோ ‘வித்யா’ என்றோ ஒரு சத்தம் போட்டான். அப்போது விஜய்க்கு 10 வயது, அன்றிலிருந்து இன்றுவரை எந்த பெண் குழந்தையைப் பார்த்தாலும் எங்களுக்கு பிடித்துப் போய்விடும்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.